இந்திய ஊடகங்களில் பேசு பொருளான மோடியின் எக்ஸ் தள பதிவு
இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்சு எக்ஸ் தளத்தில் தெரிவித்த வாழ்த்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
மாலைதீவின் திவேஹி (Dhivehi) மொழியில் பிரதமர் வெளியிட்டிருந்த இந்த இராஜதந்திர செய்தியை மொழிபெயர்க்கும் போது, Grok AI பாரிய குளறுபடியைச் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய மற்றும் மாலைதீவு இடையிலான உறவு
பிரதமர் தனது பதிவில், "இந்தியாவின் 77 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரு நாட்டு மக்களின் நலனுக்காகவும் நாம் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்.

மாலைத்தீவு மக்கள் செழிப்புடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். இது வழமையான ஒரு நல்லெண்ணச் செய்தியாகும்.
ஆனால், Grok AI அதனை முற்றிலும் மாறுபட்டதாகவும், அரசியல் ரீதியாக உணர்ச்சிகரமானதாகவும் மொழிபெயர்த்துள்ளது.
அதில் "இந்தியாவுக்கு எதிரான பிரசாரங்களில் மாலைதீவு அரசாங்கமும் மக்களும் ஈடுபட்டுள்ளனர். இரண்டு இந்தியா எதிர்ப்புப் பிரசாரங்களிலும் அவர்கள் முன்னணியில் இருந்து போராடினர்" என்று Grok AI தவறாகக் காட்டியுள்ளது.
அத்துடன், குடியரசு தினத்தை சுதந்திர தினம் என்றும் அது தவறாகக் குறிப்பிட்டுள்ளது. இந்தியா மற்றும் மாலைதீவு இடையிலான உறவில் அண்மைக்காலமாகப் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், AI கருவியின் இத்தகைய தவறான மொழிபெயர்ப்பு எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த மொழிபெயர்ப்பு சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, தவறான தகவல்கள் பரவுவது குறித்த கவலைகள் எழுந்துள்ளன.