இந்திய மக்களவை தேர்தல் பொய்யாகிறதா..! தேர்தலுக்கு பின்னரான கணிப்புகள்
இந்திய மக்களவை தேர்தல் தொடர்பாக கடந்த ஜூன் 1ஆம் திகதி வெளியான தேர்தலுக்கு பின்னரான கருத்து கணிப்புகள் பொய்யாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இன்று வெளியாகி வரும் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணிகளுக்கு இடையே சரிநிகர் மோதல் உருவாகி வருகிறது.
மக்களவை தேர்தலின் கடைசி கட்டமான ஏழாம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் திகதி நடைபெற்ற நாள் மாலையில் பல தனியார் நிறுவனங்களும், தொலைக்காட்சி ஊடகங்களும் தேர்தலுக்கு பின்னரான கருத்து கணிப்புகளை வெளியிட்டன.
தேர்தல் முடிவுகள்
இவை அனைத்திலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிற்கு 300 முதல் 400 தொகுதிகள் கிடைக்கும் எனக் கணித்திருந்தன.தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி (Narendra Modi) பிரதமராவது உறுதி எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று காலை முதல் வெளியாகி வரும் மக்களவை தேர்தலின் முடிவுகள், தேர்தலுக்கு பின்னரான கணிப்புகளை பொய்யாகி வருகின்றன.
காலை 11.00 மணி வரை வெளியான தேர்தல் முன்னணியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 291, இந்தியா கூட்டணிக்கு 225 தொகுதிகளில் முன்னணி கிடைத்துள்ளது. ஏனைய கட்சிகளுக்கு 27 தொகுதிகளில் முன்னணி நிலை உள்ளது.
இவற்றில் முக்கிய மாநிலமான உத்தரப் பிரதேசத்திலும் ஆளும், எதிர்கட்சி கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 291 முன்னணியில் இருந்தாலும், சில தொகுதிகளில் மிகக்குறைவாக ஓரிரு ஆயிரம் வாக்குகளில் முன்னணி வகிக்கின்றன.
சரிநிகர் போட்டி
இதன் மூலம், இரண்டு கூட்டணிகளுக்கு இடையில் தேசிய அளவில் சரிநிகர் போட்டி நிலவுவதாகத் தெரியவந்துள்ளது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதியில் அவர் சற்றே குறைவான வாக்குகளில் முன்னேறி வருகிறார்.
இது பாஜகவை மிகப்பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது. வாரணாசியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடும் பிரதமர் மோடி இந்த தேர்தலில் கடந்த இரண்டு முறையைக் காட்டிலும் அதிகமான வாக்குகளில் வெற்றிபெறுவாரென தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், காங்கிரஸின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி இரண்டாவதாகப் போட்டியிடும் ரேபரேலியிலும் முன்னணி வகிக்கிறார். இவர் 2019இல் தோல்வி அடைந்த அமேதியில் மத்திய அமைச்சரான ஸ்மிருதி மீண்டும் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
இவரை காங்கிரஸின் கிஷோரி லால் சர்மா வெற்றிபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸை உற்சாகப்படுத்தி விட்டது. இதன் பின்னணியில் அக்கட்சியின் கூட்டணியான சமாஜ்வாதியின் வாக்காளர்கள் ஆதரவும் இருப்பதாகக் கருதப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடும் கட்சிகளின் சமாஜ்வாதிக்கு 33க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னணி பெற்றுள்ளது.
தமிழகத்தில் மறுவெற்றி
காங்கிரஸ் சுமார் ஐந்து தொகுதிகள் முன்னணி வகிக்கின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உத்தரப் பிரதேசத்தில் அமைந்த ராமர் கோயில் பெரும் பலமாகப் பார்க்கப்பட்டது. எனினும், அயோத்தி கோயிலின் பலன் பாஜகவிற்கு உத்தரப் பிரதேசத்திலாவது கிடைக்குமா? எனும் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியா கூட்டணியின் மற்றொரு முக்கியக் கட்சியான திமுகவும் தமிழகத்தில் மறுவெற்றி பெறுவது இந்தியாவை பலப்படுத்தி வருகிறது. பிஹாரிலும் இந்தியா கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணியிற்கு சரிநிகரான போட்டியில் முடிவுகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலை, பாஜகவின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிற்கு பின்னடைவாக இருப்பினும், ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படுகிறது.
இம்மாநிலங்களில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் இரண்டிற்கும் அதிகமாக பெற்றுள்ளது. இருப்பினும், மாலை 6.00 மணி சுமாருக்கு வெளியாகும் பெரும்பாலானத் தொகுதிகளின் முடிவுகள் உண்மையான நிலையை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சியே தொடரும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |