மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
மன்னார் (Mannar) பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்த அனுமதி கிடைத்துள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் (P. S. M. Charles) நெறிப்படுத்தலின் கீழ், மாகாண சபையால் திட்ட முன்மொழிவு தயாரிக்கப்பட்டு சுகாதார அமைச்சின் ஊடாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டது.
நன்கொடை
இதனை தொடர்ந்து, இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்திய அரசாங்கம் 600 மில்லியன் ரூபா நன்கொடையை வழங்குவதற்கான அனுமதியை அளித்துள்ளது.
இதற்கமைய, குறித்த நன்கொடையானது மன்னார் பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான கட்டிட நிர்மாண பணிகளுக்கும், மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்குமாக பயன்படுத்தப்படவுள்ளது.
மேலும், மன்னார் பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இன்மையால் மக்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்ற நிலையில் இந்தியாவின் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |