இலங்கையில் இந்திய கடற்றொழிலாளர்கள்: உரிய நடவடிக்கைக்கு மத்திய அரசாங்கம் உறுதி
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார நலன்களுக்கு தீர்வு காண தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முயற்சித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்(S. Jaishankar) தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று (27.06.2024) பதிலளித்துள்ளார்.
34 இந்திய கடற்றொழிலாளர்கள்; தற்போது இலங்கையில் நீதிமன்றக் காவலில் உள்ளதுடன் 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு இலங்கையில் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய கடற்றொழிலாளர்கள்
இந்த நிலையில், கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள துணைத் தூதரகம் ஆகியவை தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை முன்கூட்டியே விடுவிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றன என்றும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
அப்போதைய மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வுக்குப் பிறகு, இந்தப் பிரச்சினையின் தோற்றம் 1974 ஆம் ஆண்டுக்கு முந்தையது என்பதையும் ஜெய்சங்கர் தமது பதிலில் சுட்டிக்காட்டியுள்ளார்
எனினும், இந்திய கடற்றொழிலாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு தமது அரசாங்கம், மிகுந்த முன்னுரிமை அளிக்கும் என்றும், அதனை உறுதியாக நம்பலாம் என்றும் ஜெய்சங்கர், ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஜூன் 19, 24, 25 ஆகிய திகதிகளில் எழுதிய கடிதங்களுக்கே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |