யாழ். துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை மீட்க இலங்கை வரும் இந்திய கடற்தொழிலாளர்கள்
இலங்கை அரசாங்கத்தால் விடுதலை செய்யப்பட்டு யாழ்ப்பாணம் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை மீட்க 14 பேர் கொண்ட இந்திய கடற்தொழிலாளர்கள் யாழ்ப்பாணம் நோக்கி வருகை தருகின்றனர்.
அரசாங்கத்தால் விடுதலை செய்யப்பட்டு மீட்கப்படாமல் உள்ள ஏழு மீன்பிடி விசைப் படகுகளை ஆய்வு செய்து மீட்டும் இந்தியாவிற்கு கொண்டு செல்வதற்காக 14 பேர் கொண்ட மீனவக் குழு ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை நோக்கி மீன்பிடி படகில் வருகின்றனர்.
ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து கடந்த 2022-23 ஆகிய ஆண்டுகளில் மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில் எல்லை தாண்டிய வழக்கில் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் 2023ஆம் ஆண்டு ஏழு படகுகள் விடுதலை செய்யப்பட்டது. அந்த படகுகளை மீட்பதற்காக படகின் உரிமையாளர்கள் இந்திய இலங்கை அரசிடம் மகஜர் கையளித்திருந்தனர்.
இந்தியாவிற்கு செல்ல அனுமதி
ஆனால் அதற்கிடையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடற்தொழிலாளர்களின் மனு பரிசீலிக்க படாமல் இருந்து வந்த நிலையில் இலங்கை வெளியுறவுத்துறை கடந்த வாரம் மீன்பிடி படகுகளை படகின் உரிமையாளர்கள் மீட்டு இந்தியாவிற்கு எடுத்து செல்ல அனுமதி அளித்தனர்.
அதன் அடிப்படையில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலை செய்யப்பட்ட ஏழு படகுகளை பார்வையிட்டு திரும்ப எடுத்து வருவதற்காக இன்று இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா தலைமையில் படகு உரிமையாளர்கள் என 14 பேர் கொண்ட குழு விசைப்படகு ஒன்றில் இலங்கை யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டனர்.
இராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட கடற்தொழிலாளர்கள் குழுவை மீன்பிடி படகுடன் இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடலோர காவல் படையினர் இலங்கை கடற்படை வசம் ஒப்படைக்க உள்ளனர்.
பார்வையிட்டு ஆய்வு
ஒப்படைக்கப்படும் கடற்தொழிலாளர்கள் யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு இன்று மாலை சென்றடைந்து. அங்கு இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட ஏழு படகுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.
படகுகள் மீட்கும் நிலையில் இருக்கும் பட்சத்தில் படகை மீட்டு வரவும், எஞ்சின் கோளாறு காரணமாக மீட்க முடியாமல் கடலில் மூழ்கிய படகுகளை தமிழகத்திற்கு எடுத்து வருவதற்கான பணிகள் தொடர்பாக இந்த குழு ஆய்வு செய்ய உள்ளனர்.
இவர்கள் இரண்டு நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கி படகுகளின் தரம் மற்றும் உறுதி தன்மை, இன்ஜின்களில் ஏற்பட்ட பழுது குறித்து ஆய்வு செய்து நாளை மாலை மீண்டும் ராமேஸ்வரம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



