மன்னாரில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு (Photos)
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவுள்ளது.
15 இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று (16.10.2023) உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 15 இந்திய கடற்றொழிலாளர்கள் கடந்த சனிக்கிழமை (14.10.2023) மாலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த கடற்றொழிலாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
கைது செய்யப்பட்ட 15 இந்திய கடற்றொழிலாளர்களும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்று (15.10.2023) காலை மலேரியா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கடற்படையின் ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் கடற்றொழிலாளர்கள் அனைவரும் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதனையடுத்து கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளினால் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் அனைவரும் மன்னார் பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த 15 கடற்றொழிலாளர்களும் இன்று (16) மாலை மன்னார்
நீதிமன்றத்தில் முன்னிலைப்பட்ட நிலையில் நீதிமன்றம் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க
உத்தரவிட்டுள்ளது.