நாகப்பட்டினம் கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அருகே உள்ள கடற்கரையிலிருந்து பல கடல் மைல் தொலைவில் கடற்றொழிலில் ஈடுபட்ட மூன்று கடற்றொழிலாளர்கள், இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம், இன்று(08.11.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தெரியவருகையில்,
தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படும் மூவரும் நேற்று மதியம் தொழிலுக்கு சென்றுள்ளனர்.
கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல்
இதன்போது நாகப்பட்டினம் - கோடியக்கரை கடற்கரைக்கு தென்கிழக்கே சுமார் 16 கடல் மைல் தொலைவில் வைத்து இலங்கை கடற்படையினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன்போது இலங்கை கடற்படையினர் இருவர், இந்திய கடற்றொழிலாளர்களின் படகில் ஏறி அவர்களை கயிறுகளால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 15 கிலோ மீன்பிடி வலையை சேதப்படுத்தியதுடன், கடற்றொழிலாளர்களிடம் இருந்து 20 கிலோ நண்டு மற்றும் தொலைபேசிகளையும் பறிமுதல் செய்து, அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து மூன்று கடற்றொழிலாளர்களும் இன்று காலை கோடியக்கரை கடற்கரைக்கு மீளவும் திரும்பியுள்ளனர்.
எனினும் அவர்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. கடந்த ஐந்து மாதங்களில் இந்தப் பகுதி கடற்றொழிலாளர்கள் மீது நடத்தப்படும் ஒன்பதாவது தாக்குதல் இது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதுவரை நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50 கடற்றொழிலாளர்கள், நடுக்கடல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |