இலங்கையில் இந்து பாரம்பரியம் அழிக்கப்படுகின்றது - தமிழ் டயஸ்போரா அமைப்பு
இலங்கையில் இந்து பாரம்பரியம் இலங்கை அரசாங்கத்தால் தவிர்க்கமுடியாமல் அழிக்கப்படுவதாக அமெரிக்கா நியூயோர்க்கை தளமாகக்கொண்ட தமிழர் நடவடிக்கை குழுவான தமிழ் டயஸ்போரா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
1948 இல் சுதந்திரம் பெற்றதில் இருந்து சுமார் 1,800 இந்து கோவில்கள் மற்றும் பாரம்பரிய தளங்களை அழித்த பின்னர், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இந்து கலாசாரம், பாரம்பரியம் மற்றும் கோவில்கள் தற்போது இலக்கு வைக்கப்படுவதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் வடக்குக் கடற்கரையில் உள்ள கீரிமலையில் மிகவும் போற்றப்படும் தலமான ஆதி சிவன் கோயிலில் ஐந்து நூற்றாண்டு பழமை வாய்ந்த சிவன் கோயில் இராணுவ ஆக்கிரமிப்பின் மறைவின் கீழ் அழிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து பல ஆண்டுகால இராணுவக் கட்டுப்பாட்டின் பின்னர் முதன்முறையாக இந்தப் பகுதிக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட போதுதான் இந்தச் செய்தி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்துக்களின் புனித இடத்தை அரசாங்கம் இழிவுபடுத்தியுள்ளது
இடிக்கப்பட்ட கோவிலுக்கு பதிலாக, அங்கு ஒரு ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டுள்ளது, இதன் மூலம் இந்துக்கள், இறந்தவர்களின் இறுதி சடங்குகளை செய்யும் இடம், யோகியின் பழங்கால நினைவுச்சின்னங்கள் அமைந்துள்ள இடம் மற்றும் முழு நாட்டிலும் உள்ள இந்துக்களுக்கு புனிதமான தன்மையை கொண்ட இடத்தை இலங்கை அரசாங்கம் இழிவுப்படுத்தியுள்ளது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 2015 ஆம் ஆண்டு இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது அருகிலுள்ள நகுலேஸ்வரம் சிவன் கோயிலுக்குச் சென்று பூஜை செய்தார்.
நகுலேஸ்வரம் ஐந்து ஈஸ்வர கோயில்களில் ஒன்றாகும். இது வரலாற்றுக்கு முற்பட்டது. அத்துடன் அழிக்கப்பட்டுள்ள சிவன் கோயிலின் முழுப் பகுதிக்கும் குறிப்பிட்ட புனிதத்தை வழங்குகிறது. இலங்கையின் தற்போதைய பொருளாதார சவால்நிலையில் இருந்து இந்தியாவும் சர்வதேச நாடுகளும் இலங்கையை மீட்டெடுக்கும் வேளையில், இலங்கையின் இந்து பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் கடைசிச் சின்னங்கள் இலங்கை அரசாங்கத்தால் தவிர்க்கமுடியாமல் அழிக்கப்படுகின்றன.
கிழக்கில் திருகோணமலையில் உள்ள இந்துக்களின் புனிதத் தலமான கிண்ணியா வெந்நீரூற்று, அனுராதபுரத்தின் தெற்கு நகரத்துடன் இணைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குருந்தூர் மலையிலுள்ள மற்றுமொரு சிவன் கோயிலான ஆதி சிவன் ஐயனார் ஆலயம் அண்மையில் அழிக்கப்பட்டுள்ளது.
இந்து கலாச்சாரத்தை அழிப்பதற்கு சர்வதேச உதவி வேண்டாம்
இந்தநிலையில், இலங்கைக்கான சர்வதேச உதவிகளை வரவேற்கும் அதேவேளை, நாட்டின் பண்டைய இந்து கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை அழிக்கும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கு, இலங்கை அரசாங்கம் அந்த உதவியை பயன்படுத்துவதில்லை என்பதை உறுதிப்படுத்துமாறு நன்கொடையாளர்களிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுப்பதாக தமிழ் டயஸ்போரா அமைப்பு தெரிவித்துள்ளது.
அதேநேரம் இந்து சமயப் பாரம்பரியம் விரைவில் அழிந்து வருவதைத் தடுக்க, தீவின் வடக்கு-கிழக்கு பிராந்தியத்தில் இடைக்கால சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையை நிறுவுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறும் நன்கொடையாளர்களை கோருவதாக தமிழ் டயஸ்போரா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
குறிப்பிட்ட மூன்று சிவன் கோவில்களின் மொத்த புனரமைப்பு மட்டுமன்றி, வடகிழக்கில் இலங்கை அதிகாரிகளால் இடிக்கப்பட்டுள்ள அனைத்து இந்து கோவில்கள் மற்றும் புனித இந்து பாரம்பரிய தளங்களை மீட்டெடுக்க வேண்டும் என்றும அமெரிக்கா நியூயோர்க்கை தளமாகக்கொண்ட தமிழர் நடவடிக்கை குழுவான தமிழ் டயஸ்போரா அமைப்பு கோரியுள்ளது.