தடுப்பூசி மருந்தின் விலையை அதிகரித்துள்ள இந்திய நிறுவனம்! விரும்பினால் கொள்வனவு செய்யுமாறு இலங்கையிடம் தெரிவிப்பு
அஸ்ரா செனகா, கோவிஷீல்ட் தடுப்பூசி ஒன்றை 15 அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்வதாக இணங்கினால், 6 லட்சம் தடுப்பூ மருந்துகளை இரண்டு வாரங்களுக்குள் வழங்க முடியும் என இந்தியாவின் சீரம் நிறுவனம் மருந்து உற்பத்தி மற்றும் விநியோக ராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நிறுவனம் இதற்கு முன்னர் 5 டொலர்களுக்கு தடுப்பூசி மருந்தை வழங்கி இருந்தது. இந்த நிலையில் 10 டொலர்களுக்கு தடுப்பூசி மருந்தை வழங்குமாறு ராஜாங்க அமைச்சு இந்திய நிறுவனத்திடம் கோரியுள்ளது.
12 லட்சத்து 64 ஆயிரம் கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் இலங்கைக்கு கிடைத்துள்ளன. எனினும் மேல் மாகாணத்தில் கோவிஷீல்ட் முதல் தடுப்பூசி வழங்கப்பட்ட 6 லட்சம் பேருக்கு இரண்டாவது தடுப்பூசியை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
முதல் தடுப்பூசி வழங்கப்பட்டு 10 வாரங்களில் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இரண்டாவது தடுப்பூசியை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது தடுப்பூசி உரிய காலத்தில் வழங்காது போனாலும் பாதிப்புகள் ஏற்படாது என்பது மருத்துவர்களின் நிலைப்பாடாக இருக்கின்றது.
அதேவேளை ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் வீ தடுப்பூசி மருந்து முதல் கட்டமாக 50 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் இன்று இலங்கைக்கு கிடைக்க உள்ளன. ஏற்கனவே 15 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் கிடைத்திருந்தன.
எனினும் முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியை வழங்க முடியாது எனவும் இரண்டாவது தடுப்பூசி மாறுப்பாட்டை கொண்டது எனவும் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால், இரண்டாவது தடுப்பூசி வழங்க 65 ஆயிரம் தடுப்பூ மருந்துகளை வழங்குமாறு அரசாங்கம் ரஷ்ய மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தடுப்பூசி வழங்குவதை அரசியல்மயப்படுத்தாது விஞ்ஞான ரீதியாக வழங்குமாறு விசேட மருத்துவ நிபுணர்களின் சங்கம், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் நேற்று முன்தினம் கோரிக்கை விடுத்திருந்தது.