மோப்ப நாயின் உதவியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (19) விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் ,38 வயதுடைய இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சோதனை
இது தொடர்பில் தெரியவருகையில் ,சந்தேக நபர் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்திலிருந்து இன்றைய தினம் காலை 11.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, விமான நிலையத்தில் இருந்த பொலிஸ் மோப்ப நாய் ஒன்று சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதிகளை மோப்பமிட்டு சத்தமிட்டுள்ளது.
பின்னர், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர்கள் இணைந்து, சந்தேக நபர் கொண்டு பயணப் பொதிகளை சோதனையிட்டுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
இதன்போது, சந்தேக நபர் கொண்டு வந்த பொம்மைகளுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடியே 60 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு கிலோ 300 கிராம் குஷ் போதைப்பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முற்படுத்த விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |