120 கொள்கலன் இந்திய காய்ந்த மிளகாய் கொழும்பு துறைமுகத்தில் முடக்கம்
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 3.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான 120 கொள்கலன் காய்ந்த மிளகாய், ஈரப்பத அளவு இலங்கையின் தரநிலையை விட அதிகமாக இருப்பதால் சுமார் இரண்டு மாதங்களாக கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை தரநிலையின்படி காய்ந்த மிளகாயின் ஈரப்பத அளவு 12 வீதத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும்.
இதனை 14 வீதமாக அதிகரிக்குமாறு இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கைக்கான காய்ந்த சிவப்பு மிளகாய் ஏற்றுமதி
பிரச்சினை காரணமாக இலங்கைக்கான காய்ந்த சிவப்பு மிளகாய் ஏற்றுமதியை இந்திய மிளகாய் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

இந்த நிலையில், குறித்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வைப் பெற்றுத்தருமாறு ஆந்திரப் பிரதேச முதலமைச்சரிடம் இந்திய ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், இலங்கையில் காய்ந்த மிளகாயின் சில்லறை விலை கிலோகிராம் ஒன்றுக்கு சுமார் 1,800 ரூபாயாக அதிகரித்துள்ளது.
பல்பொருள் அங்காடிகளில் விலை 2,000ஐத் தாண்டியுள்ளது. இதேவேளை, மிளகாய்த் தூள் உற்பத்தியாளர்களும் மூலப்பொருள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.