இலங்கையில் இந்திய வங்கிகளுக்கு வழங்கப்பட உள்ள சிறப்பு அனுமதி
இந்திய ரிசர்வ் வங்கி(RBI) வெளியிட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவிப்பு மூலம், இலங்கை, பூட்டான் மற்றும் நேபாளத்தில் வசிக்கும் வங்கிகள் அல்லது தனிநபர்களுக்கு இந்திய ரூபாயில் கடன் வழங்க இந்திய வங்கிகளுக்கும், அவற்றின் வெளிநாட்டுக் கிளைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் 2018ஆம் ஆண்டின் 'அந்நியச் செலாவணி முகாமைத்துவ (கடன் பெறுதல் மற்றும் வழங்குதல்) ஒழுங்குமுறைகளில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திருத்தம், இலங்கையில் உள்ள வணிகங்களுக்குக் கடன்களைப் பெறுவதை மேலும் எளிதாக்கும் என இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கடன்களை இந்திய ரூபாயிலேயே வழங்க முடியும் என்ற ஏற்பாடு, இலங்கை வணிகங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இது அந்நியச் செலாவணி மாற்று விகித இடர்களைக் குறைக்கும்.
உயர்ஸ்தானிகரகம் நம்பிக்கை
அத்துடன், இந்த நடவடிக்கை இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையேயான எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் நிதித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்த உதவும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகரகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்திய ரூபாயில் கடன் பெறுவதற்கான இந்த புதிய வசதி, குறிப்பாக இந்தியாவிலிருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் அல்லது இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் இலங்கை வணிகர்களுக்கு மிகப்பெரிய நன்மையை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



