கொழும்பை மிரட்டிய இந்திய விமானப்படை
கட்டுநாயக்க விமானப்படைத் தளம் மட்டுமன்றி கொழும்பு வான்பரப்பும் கூட கடந்த வாரம், முழுவதும் இந்திய விமானப்படை மயமாகவே காணப்பட்டது.
இந்திய விமானப்படையின் கிரண் எம்.கெ 2 பயிற்சி விமானங்கள், தேஜஸ் போர் விமானங்கள், தேஜஸ் பயிற்சி விமானங்கள், துருவ் ஹெலிகொப்டர்கள், சி 130 மற்றும் சி 17 குளோப் மாஸ்டர், விமானங்கள் மற்றும் இந்தியக் கடற்படையின் டோனியர் விமானம் என்று 25 இந்திய விமானங்கள் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் தரித்து நின்ற காட்சி, அதனை இலங்கை விமானப்படையின் தளமாக அல்லாமல், இந்திய விமானப்படையின் தளம் போலவே மாறியிருந்தது.
இப்போது இலங்கை விமானப்படையிடம் உள்ள போர் விமானங்கள் அல்லது பயிற்சி விமானங்களின் எண்ணிக்கையை விட கூடுதலான இந்திய போர் விமானங்கள் கட்டுநாயக்கவில் தரிந்து நின்றன.
இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற விமான சாகச கண்காட்சியில் பங்குபற்றவே இந்திய விமானப்படையின் இந்தப் பாரிய அணி கட்டுநாயக்கவில் தரித்திருந்தது.
சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தியா தனது விமானப்படையின் அதிகளவு போர் விமானங்களை ஒரே நேரத்தில் வேறொரு நாட்டின் தளத்தில் தரித்து நிறுத்தியது இது தான் முதல் முறை.
இலங்கை விமானப்படையின் 50ஆவது ஆண்டு விழா 2001ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட போது இந்திய விமானப்படை விமானங்கள் சில இங்கு வந்து விமான சாகசத்தில் ஈடுபட்டன.
அதற்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு, மிகவும் முக்கியமானதொரு தருணத்தில் இந்தியா தனது மிகப் பெரிய விமான அணியை இலங்கைக்கு அனுப்பி வைத்திருக்கிறது.
இந்திய விமானப்படையின் இந்த பெரிய அணி இலங்கை விமானப்படைத் தளபதியின் அழைப்பின் பேரில் தான் இங்கு வந்தது.
என்றாலும், இந்தளவு பெரியதொரு அணியை அனுப்பி வைக்கும் விடயத்தை, தீர்மானிக்கும் பொறுப்பில் இருந்தது இந்தியாவே என்று தெரிகிறது.
இந்தளவு விமானங்களை கொழும்பில் அணிவகுத்துச் செல்ல வைத்ததன் மூலம், இந்தியா சில விடயங்களை குறிப்பால் உணர்த்தியிருக்கிறது. இன்னும் சில இலக்குகளை அடைவதற்கான கதவுகளையும் திறந்து விட்டிருக்கிறது.
இந்தியா அனுப்பி வைத்த போக்குவரத்து விமானங்களை தவிர்ந்த, ஏனைய 23 விமானங்கள் மற்றும் ஹெலிகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை.
இது, இந்திய விமானப்படையின் பலத்தை கொழும்புக்கு மட்டுமன்றி, சிங்கள மக்களுக்கும் காட்டுவதற்கான ஒரு முயற்சியாக இருக்கலாம்.
ஏனென்றால், இந்தியா தொடர்பாக சிங்களத் தேசியவாத அரசியல்வாதிகளும், பெளத்த பிக்குகளும், அண்மைக்காலமாக வெளிப்படுத்தி வந்த கருத்துக்கள், புதுடெல்லியை கோபப்படுத்தும் வகையிலேயே அமைந்திருந்தன.
இந்தியாவை அலட்சியம் செய்யும் வகையிலேயே இலங்கை அரசாங்கத்தின் நகர்வுகளும் காணப்பட்டன.