இலங்கை - இந்திய உறவு.. ஆளுநர் வெளியிட்ட தகவல்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு பழமையானது. அந்த ஆழமான தொடர்பை இராமாயணத்தை விட வேறு எந்தவொரு இதிகாசமும் தெளிவாக விளக்கவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகமும், இவன்ரோக் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 'ராமாயணா' கலாசார மாநாடு, யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14.09.2025) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஆளுநர் தனது உரையில் தெரிவித்ததாவது, பல நூற்றாண்டுகளாக, இராமாயணமும் மகாபாரதமும் மனிதகுலத்துக்கு உயர்ந்த இலட்சியங்களை வழங்கும் அடித்தள நூல்களாகச் செயல்பட்டு வருகின்றன.
இவை நமது இரு நாட்டு மக்களுக்கும் பொதுவான காவியமாக மாறியுள்ளன. வடக்கு மாகாண மக்களின் மனதில் இராமாயணம் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது.
கம்பராமாயணம் என்ற மாபெரும் காவியம் தமிழ் இலக்கியத்தின் ஒரு மூலக்கல்லாகக் கொண்டாடப்படுகிறது. இது நமது மொழியை வளப்படுத்துகிறது என குறிப்பிட்டார்.









