முக்கிய திட்டம் ஒன்றில் இணையும் இந்தியா-இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம்
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்துடன், எரிசக்தி மையத்தை உருவாக்குவதற்கான திட்டங்களில் இலங்கை அடுத்த மாதம் பணிகளை ஆரம்பிக்கும் என்று இலங்கையின் எரிசக்தி அமைச்சர் இன்று தெரிவித்துள்ளார்.
தமது நாடு எரிசக்தி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அதன் மூலோபாய இருப்பிடத்தைப் பயன்படுத்த எதிர்பார்க்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, இந்த மையத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் மூன்று நாடுகளும் கையெழுத்திட்டன.
சுத்திகரிப்பு நிலையம்
கிழக்கு துறைமுக நகரமான திருகோணமலையில் உள்ள மையத்தில், தயாரிப்பு குழாய் கட்டுமானம், களஞ்சிய வசதிகள் மற்றும் ஒரு சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை இந்த திட்டத்துக்குள் அடங்குகின்றன.
இந்தியன் ஒய்லுக்கு சொந்தமான சேமிப்பு தொட்டியின் மேம்பாடும் இதில் அடங்கும்.
இந்தநிலையில், இலங்கை அரசு நடத்தும் சிலோன் பெட்ரோலியம், இந்தியன் ஒய்ல் மற்றும் ஏடி போர்ட்ஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மே மாத இறுதியில் இலங்கையில் கூடி, மையத்திற்கான விரிவான வணிகத் திட்டம் குறித்த விவாதங்களை ஆரம்பிப்பார்கள் என்று, இலங்கை எரிசக்தி அமைச்சக செயலாளர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இலங்கையின் தென் பகுதி துறைமுக நகரமான ஹம்பாந்தோட்டையில் 3.2 பில்லியன் டொலர் ஒதுக்கீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை கட்டுவதற்கான ஒப்பந்தத்தில் சீன அரசின் எரிசக்தி நிறுவனமான சினோபெக்,இலங்கையுடன் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.