இலங்கைக்கு இந்தியாவுடன் நெருக்கமான பொருளாதார உறவு அவசியம் : ரணில் விக்ரமசிங்க
உலக அரசியல் மற்றும் பொருளாதார சக்தி ஆசியாவை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், புதிய உலக ஒழுங்கில் இலங்கை தனது இடத்தை உறுதிப்படுத்திக்கொள்ள இந்தியாவுடன் வலுவான பொருளாதார ஒத்துழைப்பை பேண வேண்டியது மிகவும் முக்கியமானது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை சர்வதேச வர்த்தக சபை (ICCSL) ஏற்பாடு செய்திருந்த 50வது இணையவழி கருத்தரங்கில் (Webinar) உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வர்த்தக உறவுகள்
உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப இலங்கை தொழில்நுட்ப நவீனமயமாக்கல், பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் சர்வதேச முக்கிய சக்திகளுடனான கூட்டாண்மையை வலுப்படுத்த வேண்டும் வங்காள விரிகுடா பிராந்தியத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக உருவெடுத்துள்ளதுடன், உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது.

ஆசியா மற்றும் ஆபிரிக்காவின் பொருளாதார எழுச்சியால் இந்தியப் பெருங்கடல் புதிய உலக ஒழுங்கின் முக்கிய மையமாக மாறும். எனவே, இந்தோனேசியா, பங்களாதேஷ் போன்ற வங்காள விரிகுடா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுடன் இலங்கை வர்த்தக உறவுகளை மேம்படுத்த வேண்டும்.
இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உரையை மேற்கோள் காட்டிய ரணில் விக்ரமசிங்க, இலங்கை நவீனமயமாக்கலை நோக்கி நகரத் தவறினால் பிராந்தியத்தில் தனது முக்கியத்துவத்தை இழந்துவிடும் என எச்சரித்தார்.
இலங்கை பிரிக்ஸ் அமைப்பில் இணைய வேண்டும், கடலடி தகவல் தொடர்பு கேபிள்களைப் பாதுகாக்க வேண்டும் மற்றும் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் செயல்பாடுகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் யோசனை முன்வைத்தார்.