தமிழர்களின் விடுதலைக்காக போராடியவர்களை அழிக்க இந்தியா பங்காற்றியதாக அருட்தந்தை சத்திவேல் குற்றச்சாட்டு
தமிழர்களின் விடுதலைக்காக போராடியவர்களை அழிப்பதற்கு இராணுவ ரீதியில் இந்தியா
பெரும் பங்காற்றியதோடு தொடர்ந்து கலாச்சார பண்பாட்டு ரீதியில் அதனை செய்து
வருகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை
செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல்
தெரிவித்துள்ளார்.
இன்று (16.11.2023) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும், வடக்கு - கிழக்கு தமிழர்களின் தாயகம் காக்க உயிர் தியாகம் செய்தவர்களை நினைவு கூர்ந்து ஈகை சுடரேற்ற இக்காலகட்டத்தில் ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றோம்.
உயிர் தியாகம் செய்தவர்களையும், அரசியல் கைதிகளையும், இவர்களில் சமூகமயமாகி கொண்ட கொள்கையில் நிலைத்து நிற்பவர்களையும், உயிர் தியாகிகளின் குடும்ப உறவுகளையும், மாவீரர் வாரத்திற்காக ஆயத்தப்படுபவர்களையும், தாயக கொள்கை அரசியலில் நிலைத்து நிற்பவர்களையும் கொச்சைப்படுத்தி அவமானப்படுத்தும் வண்ணமாக ஒரு தென்னிந்திய நடிகை தமிழீழ விடுதலை புலிகளை பயங்கரவாதிகள் என கூறியுள்ளார்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு இதை வன்மையாக கண்டிப்பதோடு இதற்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றது.
தமிழர்களை அழித்தொழிக்கும் முயற்சி
தமிழர்களுக்கு எதிரான அரச கட்டமைப்பு பயங்கரவாதமே. இதனை கட்டிக் காக்கும் பேரினவாதமும் பயங்கரவாதமே.
இதனை மையமாக வைத்து தமிழர்களை பல்வேறு வகையில் அழித்தும், இனப்படுகொலை செய்தும், தொடர்ந்து பல்வேறு முகங்களில் இன அழிப்பு போர் தொடுத்துக் கொண்டிருப்பவர்களே பயங்கரவாதிகள்.
இவர்கள் ஒட்டுமொத்த தமிழர்களையும் பயங்கரவாதிகளாக்குவதற்கு பயங்கரவாத தடை சட்டத்தை கொண்டு வந்ததோடு அதனை கடந்த 44 ஆண்டு காலமாக பாதுகாத்து வருகின்றனர்.
இவர்கள் வழியில் நின்று தமிழர்களுக்கு எதிரான கலாச்சார பண்பாட்டு இன அழிப்பு செய்ய வரும் அந்த தென்னிந்திய நடிகையும் அவர் குழுவினரும் பேரினவாத பயங்கரவாதிகளே. இவர்களும் இன அழிப்பு கருவிகளே. இவர்கள் யாரைப் பார்த்து? எந்த துணிவில்? பயங்கரவாதிகள் என்கிறார்கள்.
தமிழர்களின் விடுதலைக்காக இறுதிவரை போராடிய விடுதலை இயக்கத்தை அழித்தொழிப்பதற்கு இராணுவ ரீதியில் இந்தியா பெரும் பங்காற்றியதோடு தொடர்ந்து கலாச்சார பண்பாட்டு ரீதியில் அதனை செய்து வருகின்றது.
அதற்காகவே அந்த தென்னிந்திய நடிகை வடக்கிற்கு வருகின்றார். இதுவே பயங்கரவாதம். இவர்களே பயங்கரவாதிகள். இதன் மூலம் தமிழர்களை அரசியல் நீக்கம் செய்ய வேண்டும் என்பதே இந்தியாவின் அரசியல் நோக்கம்.
இத்தகைய நோக்கத்தை ஒட்டுமொத்த தமிழர்களும் வன்மையாக கண்டிப்பதோடு அதனை எதிர்க்கவும் துணிவார்கள் என்பதை அந்த தென்னிந்திய நடிகை போன்றவர்கள் மனதில் இருத்த வேண்டும்.
தமிழர் விடுதலை கருத்தியலை அதன் செயற்பாட்டை பாசிசம் எனக் கூறிய பேரினவாத கருத்து உருவாக்க சட்டத்தரணிக்கும் அதே கருத்தியலை தொடர்ந்து முன்னெடுக்க முனைந்த யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சமூகத்திற்கும் அப்பல்கலைக்கழக மாணவர் சமூகம் நல்லதொரு பாடத்தை கற்பித்ததை நாம் அறிவோம்.
தற்போது அதே சிந்தனையோடு எதிர்வரும் மாதம் வடக்கிற்கு வருவதற்கு ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கும் இந்திய இசை குழுவிற்கும் தமிழர்களால் நல்லதொரு பாடம் புகட்டப்படும்.
மாவீரர் வாரம்
மாவீரர் வாரம், மாவீரர் நாள் என்பது வருடம் தோறும் வந்து போகும் தீபாவளி பண்டிகை போன்றதல்ல. இது வடக்கு-கிழக்கு தமிழர்களுக்கும், தமிழர் தாயகத்தில், தமிழர் விடுதலையில் தாகம் கொண்டவர்களுக்குமான தனித்துவ வாரம். தனித்துவ நாள்.
இதில் எமது அரசியல் எதிர்காலம் மட்டுமல்ல அடுத்த சந்ததிக்கு கடத்தும் வரலாறும் உள்ளது. இதனை எந்த சக்திகளாலும் அழிக்க முடியாது.
தமிழர்களின் அரசியல் தாகத்தை அழிக்க இலங்கை அரசோடு அயலக சக்திகள் மட்டுமல்ல தாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில புல்லுருவிகளும் மிக வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது கலாச்சார, பண்பாட்டு அழிவை முன்னெடுத்து நில ஆக்கிரமிப்பையும் வேகப்படுத்தி இருக்கும் காலச் சூழ்நிலையிலேயே (அதன் இன்னும் ஒரு வடிவமே அந்த தென்னிந்திய நடிகை குழுவினர்) இவ்வருடம் மாவீரர் வாரத்திற்காக ஆயத்தப்படுகின்றோம்.
எத்தகைய அரசியல் பிரழ்வும் இன்றி தாயகம் காக்கும் கொள்கை அரசியலோடு ஈகை சுடர் ஏற்றுவோம். எமை அழிக்க நினைக்கும் சக்திகள் நாம் ஏற்றும் ஈகை சுடரில் புதுத் தெளிவு பெறட்டும். தாயக அரசியல் தாகத்தோடு சக்தி கொள்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





டயானாவின் மரணத்தால் இளவரசர் ஹரிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி: கண்டுபிடித்த நபர் யார் தெரியுமா? News Lankasri

மகனையே கொடூரமாக மிரட்டும் ஆதி குணசேகரன், பெண்கள் திட்டம் நடக்குமா! எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
