இலங்கை – இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் புதுடில்லியில் இருதரப்புப் பேச்சுவார்த்தை
இந்திய – இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு இடையில் நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் பிரச்சினைகள் குறித்து இரு நாடுகளினதும் அதிகாரிகள் மட்டத்திலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தையானது எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் திகதி இந்தியாவின் புதுடில்லியில் நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய மற்றும் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு இடையிலான பிரச்சினை நீண்டகாலமாகத் தொடர்ந்துவரும் ஒரு விவகாரமாகும்.
இருதரப்புப் பேச்சுவார்த்தை
இதற்கு நிரந்தரமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான தீர்வொன்றை எட்டுவதில் எமது அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
அதன் ஓர் அங்கமாக, எதிர்வரும் ஜனவரி 22ஆம் திகதி இலங்கை கடற்றொழில் அமைச்சின் செயலாளர் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் இந்தியாவுக்குச் சென்று, அந்நாட்டு கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட தொடர்புடைய உயர்மட்ட அதிகாரிகளுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.

இந்தியா – இலங்கை கடற்றொழில் தொடர்பான கூட்டுச் செயற்குழுவின் கூட்டமாக நடைபெறவுள்ள இப்பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில் சார்ந்த முக்கிய பிரச்சினைகள் விரிவாக ஆராயப்படவுள்ளன.
குறிப்பாக, தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிப் பிரவேசித்தல், தடைசெய்யப்பட்ட இழுவைமடி கடற்றொழில் முறையைப் பயன்படுத்துதல், இதனால் இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கும் கடல் வளங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு, நிரந்தரத் தீர்வொன்றை எட்டுவதற்கான வழிமுறைகள் ஆராயப்படவுள்ளன.
நிரந்தரத் தீர்வு
இக்கூட்டத்தில் இலங்கை தரப்பிலிருந்து கடற்றொழில் அமைச்சு, கடற்றொழில் திணைக்களம், இலங்கை கடற்படை, இலங்கை பொலிஸ், கடலோரக் காவல்படை, தேசிய நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையம் (NARA), சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன் மூலம் சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களினதும் பங்களிப்புடன் பிரச்சினைகளை விரிவாக ஆராய்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மற்றும் தமிழக அரச தரப்பினரும் இவ்விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.
ட்ரம்பின் கடற்படை முற்றுகை... சீனாவில் இருந்து 1200 லொறிகளில் சரக்குகளை வரவழைத்த ஈரான் News Lankasri