குறி வைக்கப்படும் தமிழர்களின் தீவுகள்! இந்தியாவின் அடுத்த பெரும் பாய்ச்சல்
இலங்கையின் தலையாக அமைந்திருக்கும் யாழ்ப்பாண தீபகற்பமானது மக்கள் வசிக்கத்தக்க எட்டுத் தீவுகளைத் தன்வசம் கொண்டிருக்கிறது.
கச்சதீவு
அதில் நெடுந்தீவுக்கு அண்மையாகக் காணப்படுவதே கச்சதீவு ஆகும். 285 ஏக்கர் பரப்புடைய இத்தீவில் நீண்டகாலமாகவே மனிதர்கள் தொடர்ச்சியாக வாழவில்லை. ஆயினும் இலங்கை – தமிழக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையின்போது தங்கிச் செல்வதற்காக இத்தீவைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.
பிரித்தானியர் வருகையைத் தொடர்ந்து தேசிய அளவில் உருவான “அகன்ற இந்தியா” தேசவுருவாக்கத்தில் மீனவர்களிடமிருந்த கச்சதீவு இந்திய எல்லைக்குள் கொண்டுசெல்லப்பட்டது.
1974 ஆம் ஆண்டில் இந்தியா – இலங்கையிடையே மேற்கொள்ளப்பட்ட “இந்தியா –சிறீலங்கா கடல் எல்லை ஒப்பந்தத்தின்படி“ இத்தீவு மீண்டும் இலங்கைக்கு வழங்கப்பட்டது. அவ்வாறு இலங்கைக்கு வழங்கப்பட்டபோதிலும், தமிழக மீனவர்கள் அதில் தங்கி ஓய்வெடுக்கவும், மீன்பிடிக்கவும், வலைகளை உலரவைக்கவும், புனித அந்தோனியார் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபடவுமான அனுமதியினை உடன்படிக்கை ஏற்படுத்திக்கொடுத்திருந்தது.
கடுமையாக எதிர்த்த கருணாநிதி
இந்த உடன்படிக்கையை அப்போதைய தமிழக முதல்வராக இருந்த மு.கருணாநிதி எதிர்த்தார். சட்டசபையில், ”இந்தியாவுக்கு சொந்தமானது என நாம் கருதுவதும், தமிழ்நாட்டிற்கு மிக நெருங்கிய உரித்துடையதுமான கச்சதீவு விடயத்தில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு குறித்து ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவில் இந்தியாவுக்கு இருக்கும் அரசுரிமையை நிலைநாட்டும் வகையில் அது திருத்தயமைத்துத் தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும்படி வலியுறுத்துகிறோம்” எனத் தீர்மானம் இயற்றினார்.
அதனைத் தொடர்ந்து கச்சதீவை மீட்கவேண்டும், இந்தியா தனதுடமையாக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் இந்தியாவில் மிக நீண்டகாலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழத்தின் செயலாளர் வைகோ இது குறித்துப் பேசாத போராட்டங்களே கிடையாது. கூடவே தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை கடற்படை துப்பாக்கி வேட்டை நடத்தும்போது தமிழக மீனவர்களும் இக்கோரிக்கையினை முன்வைப்பர். இப்போது மீண்டும் கச்சதீவை இந்தியா மீட்கவேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலினின் பகிரங்க கோரிக்கை
அண்மையில் தமிழகம் வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில் ”கடலோர மீனவ சமுதாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், கச்சதீவை மீட்டெடுத்து, மீனவ மக்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் அவர்களின் உரிமையை நிலைநாட்ட, உரிய நடவடிக்கை எடுக்க இதுதகுந்த நேரம் என்பதைப் பிரதமருக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்றார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அவரது கோரிக்கையில், கச்சதீவை மீட்பதற்கு “இது தகுந்த நேரம்” என்பதில் தான் இலங்கை தொடர்பான அண்மைய அரசியலின் மொத்தத் தந்திரங்களும் வெளிப்பட்டிருக்கின்றன. இலங்கை என்றுமில்லாத பொருளாதார வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. இனி மீளவே பல வருடங்கள் ஆகலாம், ஆகாமலும் போகலாம் என்கிற மதிப்பீட்டினைக் கண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரச் சரிவைப் பயன்படுத்தி பல நாடுகள் தம் அறுவடையை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. அதில் சீனா, இந்தியா போன்ற நாடுகள் முதன்மையானவை.
கடனுக்கு மேல் கடனைக் கொடுத்து இலங்கையின் மேல், தென் பாகங்களில் இருக்கின்ற கேந்திர முக்கியத்துவமுள்ள இடங்கள் அனைத்தையும் சீனா அபகரிகரித்துக்கொண்டிருக்கிறது.
மறுபுறத்தில், இலங்கையின் வடக்கு, கிழக்கின் கேந்திர முக்கியத்துவமுள்ள பகுதிகளை இலக்குவைத்து இந்தியா நன்கொடைகளையும், கடன்களையும் வாரி இறைத்துக்கொண்டிருக்கின்றது.
திருகோணமலைத்துறைமுகத்தின் சில பகுதிகள் எரிபொருள் தாங்கிகளை மீளமைப்பதற்கான நடவடிக்கைக்காகவும், திருகோணமலையின் சம்பூர் கிராமத்திற்குரிய 500 ஏக்கர் நிலம் மீள்புதுப்பிக்க சக்தியுடன் கூடிய மின்னுற்பத்திக்காகவும், பூநகரி கடற்கரைப் பகுதி (சீனா கடலட்டை பண்ணை அமைத்திருந்த பகுதி) காற்றாலை மின் உற்பத்திக்காகவும், மன்னார் குடா பகுதி காற்றாலை மின் உற்பத்திக்காகவும், நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு போன்றன மீள்புதுப்பிக்கத்தக்க சக்தியுடன் கூடிய மின்னுற்பத்திக்காகவும் இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவிற்கு தாரை வார்க்கப்படும் தமிழர் பகுதிகள்
இந்த வழங்கல்கள் அனைத்தும் கடந்த ஆறு மாதகாலங்களுக்குள்ளேயே நடந்துமிருக்கின்றன. அதாவது இலங்கையில் பொருளாதாரச் சரிவின் விளைவை தாங்கிக்கொள்ளாத சிங்கள மக்கள் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கிய பின்னர், ஏற்பட்ட அரசியல் ஸ்திரத் தன்மையைப் பயன்படுத்தி இந்தியா வழங்கிய அவசர உதவிகளுக்கு பிரதியுபகாரமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மேற்குறித்த கேந்திர முக்கியத்துவமிக்க இடங்கள் அந்நாட்டுக்குத் தாரைவார்க்கப்பட்டிருக்கின்றன.
இத்தகையை தாரைவார்ப்புக்களுக்கு முறைப்படியான உடன்படிக்கைகள் எவையும் பொதுமக்கள் அறிந்துகொள்ளக்கூடிய விதத்தில் இடம்பெறவுமில்லை. வெறும் திரைமறைவு உடன்படிக்கைகளாகவே இவ்வளவும் நடந்திருக்கின்றன. அதாவது இலங்கையின் பொருளாதாரச் சரிவை இந்தியா தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி இத்தீவின் தனக்குத் தேவைப்படும் அனைத்து இடங்களையும் ஆக்கிரமித்துள்ளது. அதனையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “ இது தகுந்த நேரம்” எனக் குறிப்பிடுகின்றார். இந்தக் கடன்பொறியைப் பயன்படுத்தியே கச்சதீவையும் மீட்டு விட வேண்டும் என்கிறார். ஆனால் வடக்கு, கிழக்கின் மீனவர்களோ இதனை முற்றாக எதிர்க்கின்றனர்.
வடக்கு- கிழக்கு தேசிய மீனவர் சங்கத்தின் இணைப்பாளர் முரளிதரன் இதனை பின்வருமாறு விவரிக்கிறார்.
“இந்திய மீனவர்களின் அட்டூழியங்கள் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கு. பருத்தித்துறை முனை வரைக்கும் வந்து மீன்பிடிக்கிறாங்கள். வலைகள அறுக்கிறாங்கள். தடைசெய்யப்பட்ட அத்தனை மீன்பிடி முறைகளையும் பாவிச்சி எங்கட கடல் வளத்தை அழிச்சிக்கொண்டிருக்கிறாங்கள். இந்த நிலையில கச்சதீவையும் தங்களுக்குத் தரச்சொல்லிக் கேட்கிறது, கருணாநிதி குடும்பம் ஈழத்தமிழர்களுக்கு செய்யும் இன்னொரு துரோகம். கச்சத்தீவை இந்தியாவுக்கு கொடுத்திட்டால் நெடுந்தீவு, இரணைதீவு, மன்னார், பாஷையூர், குருநகர், மண்மைதீவு என எல்லா இடங்களுக்கும், கரைக்கே வந்து இந்திய ரோலர்கள் தங்கி நின்று மீன்பிடிக்கும். எங்களுக்கு இப்ப சிறுகடல் தொழிலுகள் மட்டும் தான் மிஞ்சிக்கிடக்கு. அவங்கள் கச்சதீவில் வந்து குடியேறி இருந்து கொண்டு, இங்க மாதக்கணக்கில் தங்கி நின்று கிடக்கிறதெல்லாத்தையும் அரிச்சிக்கொண்டு போவாங்கள்” என்றார்.
கச்சதீவு உடன்படிக்கைக் கைச்சாத்தாகி அரைநூற்றாண்டினை நெருங்கிக்கொண்டிருக்கின்றது. இவ்வளவு காலமும், உடன்படிக்கையில் குறிப்பிட்டுள்ளபடியேதான் தமிழக – இலங்கை தமிழ் மீனவர்கள் செயற்பட்டு வருகின்றனர். அந்தோனியார் தேவாலயத் திருவிழாவில் சம பங்குடன் கலந்துகொள்கின்றனர். தமது உறவினைப் புதுப்பித்துக்கொள்கின்றனர்.
என்னதான் கடலில் வளச்சுரண்டல் சண்டைகள் இருப்பினும், கச்சதீவு விடயத்தில் இரு தரப்பினரும் ஒற்றுமையாகவே நடந்துகொள்கின்றனர். மீன்பிடி நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்திக்கொள்கின்றனர். இவ்வாறு கிடக்கும் ஒரு தீவை இந்தியா மீளவும் உரிமைகோருவது தவறானது. எந்த சக்தியும் ஆக்கிரமித்துக்கொள்ளாமல் அதனை அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது. ஆனால் இலங்கையின் பொருளாதாரச் சரிவானது, இந்தியாவின் புவிசார் அரசியல் ஒழுங்கின் பாதுகாப்பை தக்கவைப்பதெற்காக உருவாக்கப்பட்டதோ என்று சந்தேகிக்குமளவிற்கு இந்தியாவின் அண்மைய நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.
இந்திய பொருளாதார நலன்களுக்குத் தடையாக இருந்த புலிகளை வடக்கு, கிழக்கு பகுதிகளில் இருந்து அகற்றி, இலங்கையின் தெற்கில் தமது பொம்மையாட்சியை நிறுவி, அதனை சீர்குலையச் செய்து, இத்தீவை மொத்தமாக ஆக்கிரமிக்க மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கையின் பின்னணியிலேயே தமிழர்களுக்கு சொந்தமான தீவுக்கூட்டங்கள் இந்தியாவினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. கச்சதீவைஆக்கிரமிப்பது இந்தியாவின் அடுத்த பெரும் பாய்ச்சலாகும்.