கச்சத்தீவை கைப்பற்றுமாறு ஸ்டாலின் கோரிக்கை - ஒரு வார்த்தை கூட பேசாத மோடி
பல தசாப்தங்களுக்கு முன்னர் இந்தியாவினால் இலங்கைக்கு கையளிக்கப்பட்ட கச்சத்தீவு, இந்தியாவினால் மீளக் கைப்பற்றப்பட வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இந்த நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொண்டிருந்தார்.
கச்சத்தீவு கையகப்படுத்தப்படுவதன் மூலம் தமிழக கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவ மக்கள் எதிர்நோக்கும் பெரும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தமிழக முதலமைச்சரின் கோரிக்கை குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் இந்திய பிரதமர் உரையாற்றினார். இலங்கை தற்போது நெருக்கடியில் இருப்பதாகவும், இந்தியா பல உதவிகளை செய்து வருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிடடுள்ளார்.
அண்ணாமலை ஆதங்கம்
எவ்வாறாயினும், இந்த நிகழ்வின் பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் குப்புசாமி அண்ணாமலை தமிழக முதல்வரின் வேண்டுகோள் குறித்து கருத்து வெளியிட்டிருந்தார்
கச்சத்தீவை எப்படி திரும்பப் பெறுவது என்பது தமக்கு தெரியும் எனவும் அதனை கொடுத்தவர்களே தமக்கு பாடம் எடுக்க வேண்டாம் எனவும் குப்புசாமி அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கச்சத்தீவை மீட்டெடுப்பது தமிழக அரசின் முதன்மை குறிக்கோளாக உள்ளதாக தமிழக அரசின் மீன்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவு மீதான இந்தியாவின் இறையாண்மையை மீட்டெடுப்பதன் மூலம் பாரம்பரிய மீன்பிடிக்கும் உரிமையைத் திரும்ப பெற முடியும் என்று தமிழக அரசு தொடர்ந்தும் வலியுறுத்துவதாகவும் கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையிடம் கையளிக்கப்பட்ட கச்சத்தீவு
1974ம் ஆண்டு ஜூலை மாதம் 8ம் திகதி இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கும் இலங்கையின் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஊடாக இலங்கையிடம் கையளிக்கப்பட்டது.
கச்சத்தீவு ஒப்பந்தத்தின் பிரகாரம், இந்திய மீனவர்கள் கச்சத்தீவில் மீன்பிடி வலைகளை உலர்த்திக்கொள்ளவும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய உற்சவத்தில் இந்தியர்கள் பங்கேற்கவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. எனினும், இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிப்பதற்கான உரிமை தொடர்பில் அதில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.