கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பில் இந்தியா இன்னும் உடன்பாட்டுக்கு வரவில்லை - அனுராக் ஸ்ரீவாஸ்தவா
கொழும்பு துறைமுகம் விடயம் தொடர்பில் இலங்கையுடன் இந்தியா இன்னும் ஒரு உடன்பாட்டுக்கு வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன என்று இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா இதனை தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இந்த பதிலை வழங்கியுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் விடயத்தில் இந்தியா நீண்டகாலமாக அக்கறைக்கொண்டிருந்தது. அங்கு கையாளப்படும் பெரும்பாலான பொருட்கள் இந்தியாவிலிருந்து வருகின்றமையே இதற்கான காரணமாகும்.
இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் கொள்கை அடிப்படையில் உடன்பாடு இருந்தது.
இருப்பினும், தற்போதைய அரசாங்கம் முதலீட்டாளர்களை நேரடியாக ஈடுபடுத்துவதில் விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் விவாதங்கள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன என்று அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள கிழக்கு கொள்கலன் முனையத்தின் அபிவிருத்தி தொடர்பில் இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியாவின் மூன்று அரசாங்கங்களிடையே உடன்படிக்கை ஒன்று 2019 இல் கொழும்பில் கையெழுத்தானது.
எனினும் தொழிற்சங்கங்களின் அழுத்தம் காரணமாக இலங்கை அரசாங்கம் இந்த உடன்பாட்டில் இருந்து விலகிக்கொண்டது.
இதனையடுத்து கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் தொடர்பில் இந்தியாவுடன் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்ள இலங்கை விருப்பம் வெளியிட்டிருந்தது. எனினும் அதற்கு இந்தியா இதுவரை தமது பதிலை வழங்கவில்லை.