கனடா எல்லையில் பனியில் உறைந்து பலியான இந்திய குடும்பம் தொடர்பில் வெளியான புதிய தகவல்
கனடா - அமெரிக்க எல்லை அருகே குழந்தை உட்பட நான்கு பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட விடயம் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில்,அமெரிக்காவுக்குச் செல்லும் கனவில், கனடா எல்லையில் பனியில் உறைந்து பரிதாபமாக உயிரிழந்த குடும்பம் தொடர்பில் தற்போது சில விபரங்கள் வெளியாகியுள்ளன.
ஜனவரி மாதம் 19ஆம் திகதி, குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் (Jagdish 35), அவரது மனைவி வைஷாலி (Vaishali 33), தம்பதியரின் பிள்ளைகளான விஹாங்கி (Vihanngi 12) மற்றும் தார்மிக் (Dharmik 3) ஆகியோர் கனடா அமெரிக்க எல்லையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டிருந்தனர்.
கடத்தல் பின்னணி
இவ்வாறு உயிரிழந்தவர்களை அமெரிக்காவுக்கு கடத்தும் பின்னணியில் செயற்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் பொலிஸாரின் விசாரணையில் சிக்கியுள்ளார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வாழ்ந்து வரும் ரஜிந்தர் பால் சிங் (Rajinder Pal Singh, 48) என்னும் இந்தியர்,பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி சிறை தண்டனையும் பெற்று வந்துள்ளார்.
இவர் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் இந்திய புலம்பெயர்வோரைக் கடத்தும் ஒரு கும்பலுடன் தொடர்புடையவர் எனவும் அமெரிக்க பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
பொலிஸாரிடம் சிக்கிய ஆதாரங்கள்
இந்நிலையில், சந்தேகநபருக்கும் பட்டேல் குடும்பம் அமெரிக்கா செல்ல முயன்றதற்கும் தொடர்பு இருக்கக்கூடும் என சந்தேகத்தை ஏற்படுத்தும் சில ஆதாரங்கள் சிக்கியுள்ளன.
குறித்த நபர் ஆட்கடத்தல் தொடர்பில் தொலைபேசியில் உரையாடும் காட்சிகள், பட்டேல் குடும்பம் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் ஜனவரி மாதத்தில் பதிவாகியுள்ளன.
இந்த ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு கனடா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த குடும்பம் தொடர்பில் வெளியான தகவல்
இந்நிலையில், கனடா நாட்டின் எமர்சன் எல்லைப்பகுதியில் உயிரிழந்த நிலையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு குழந்தை உட்பட நான்கு பேரின் உடல்களை மானிடோபா பொலிஸார் கண்டுபிடித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் இந்தியர்கள் எனவும், இறந்தவர்களில் 2 பேர் பெரியவர்கள்,ஒருவர் நடுத்தர வயது உடையவர்,அமெரிக்காவில் மனித கடத்தலில் ஈடுபட்டதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இறந்தவர்கள் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.
உயிரிழந்தவர்கள், குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் (Jagdish 35), அவரது மனைவி வைஷாலி (Vaishali 33) பிள்ளைகள் விஹாங்கி (Vihanngi 12) மற்றும் தார்மிக் (Dharmik 3) ஆகியோர் என தெரியவந்துள்ளது.
ஜகதீஷ் பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர் எனவும்,சுமார் 65 இலட்ச ரூபாய் கொடுத்து அமெரிக்கா செல்ல முடிவு செய்து புறப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
அமெரிக்காவில் குடிபுகுவது ஒரு தன்மானப் பிரச்சினையாக அக்கிராமத்தில் பார்க்கப்பட்டிருக்கிறது. அதாவது, குடும்பத்தில் ஒருவராவது அமெரிக்காவில் இல்லை என்றால், அது குடும்பத்துக்கு அவமானம் என அக்கிராமத்தினர் கருதுவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.