பெருந்தோட்டப் பகுதி மாணவர்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு.. கல்வியமைச்சின் விசேட திட்டம்
பெருந்தோட்ட மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில் 60 'ஸ்மார்ட்' வகுப்பறைகளை அமைக்கும் திட்டத்திற்கு, 10 நாட்களுக்குள் இறுதி அனுமதியை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அபிவிருத்தி ஒத்துழைப்புப் பிரிவின் தலைவர் ரோஷ்னி தாம்சன் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நேற்று (19) அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடையும் வகையில் பணிகளை விரைவுபடுத்த அமைச்சர் வலியுறுத்தியுள்ள நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சின் அனுமதியைத் தாமதமின்றிப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியத் தரப்பு உறுதியளித்துள்ளது.
மாணவர்களுக்கு வாய்ப்பு
இச்சந்திப்பின் போது இந்திய நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டது.

இதன்படி, முதற்கட்டமாகத் திட்டமிடப்பட்ட 1,300 வீடுகளில் ஒக்டோபர் 31-ஆம் திகதி வரை 670 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் 20ம் திகதிக்குள் சுமார் 1,000 வீடுகளை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், இரண்டாம் கட்டத்தின் கீழ் உரிமப் பத்திரங்கள் வழங்கப்பட்ட 2,026 வீடுகளின் நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
Rebuild Sri Lanka
மேலும், 'டித்வா' சூறாவளியால் சேதமடைந்த வீடுகளை மீளக் கட்டியெழுப்ப இந்தியா வழங்கவுள்ள நிதியுதவிகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அனர்த்தத்தால் முழுமையாகச் சேதமடைந்த 5,400 வீடுகளுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கத் திட்டமிட்டுள்ள 50 இலட்சம் ரூபா நிதியுதவியில், முதற்கட்டமாகத் தலா 20 இலட்சம் ரூபாவையும், பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்குத் தலா 5 இலட்சம் ரூபாவையும் வழங்க இந்திய அரசாங்கம் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்படும் 'Rebuild Sri Lanka' திட்டத்துடன் இணைந்து இந்த உதவிகளை வெளிப்படைத்தன்மையுடன் நடைமுறைப்படுத்த அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுக்கு நாளை (நவம்பர் 20) திருமணம்... பெண், பிரபல இயக்குனரின் பேத்தி... Cineulagam