பருத்தித்துறை நகர சபை தொடர்பான குற்றச்சாட்டுகள்! சட்ட நடவடிக்கை முன்னெடுப்பு
பருத்தித்துறை நகர சபை தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட சுயாதீன விசாரணையின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், பல்வேறு நிர்வாக, ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகளை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முன்னெடுத்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, நகர சபையின் கௌரவ தவிசாளர் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை விடுவிப்பதற்கும், முன்னாள் செயலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் தொடர்பில் ஆரம்பகட்டப் புலனாய்வுகளை மேற்கொள்வதற்கும், நகர சபை உறுப்பினர் ஒருவரின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நகர சபையின் புதிய சந்தைக் கட்டடத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள குறைபாடுகளைச் சீர்செய்வதற்காக நிபுணத்துவக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழு
பருத்தித்துறை நகர சபை தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக, 2026 மார்ச் 12ஆம் திகதியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஒருவரைத் தனிநபர் விசாரணைக் குழுவாக ஆளுநர் நியமித்திருந்தார்.
குறித்த விசாரணைகள் நிறைவடைந்து அதன் அறிக்கை ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை ஆராய்ந்ததன் அடிப்படையிலேயே தற்போதைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தவிசாளர் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பு விசாரணை அறிக்கையின் அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், பருத்தித்துறை நகர சபையின் கௌரவ தவிசாளர் மீது சுமத்தப்பட்டிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுவித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை, எதிர்காலத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அமைவாக, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்காமல், நடுநிலையுடனும் பொறுப்புடனும் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் எனத் தவிசாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கை
இதற்கிடையில், பருத்தித்துறை நகர சபையின் புதிய சந்தைக் கட்டடத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள குறைபாடுகளைச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக குழுவொன்று ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளது.
புதிய சந்தைக் கட்டடத்தில் காணப்படும் அனைத்துக் குறைபாடுகளையும் ஆராய்ந்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பிக்குமாறு குழுவுக்குப் பணிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகர சபையின் நிர்வாகச் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, சட்ட ஒழுங்குகளுக்கு இணங்கிய பொறுப்புக்கூறல் மற்றும் பொதுமக்களுக்கான சேவையின் தரம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதே இந்த நடவடிக்கைகளின் நோக்கமாகும்.
விசாரணை அறிக்கையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உரிய கால எல்லைக்குள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும் ஆளுநர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.