யாழ். நகரை மறுசீரமைக்க அரசு நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு பேராசிரியர் சுரேந்திரகுமாரன் வலியுறுத்தல்
யாழ்ப்பாண நகரில் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசல், வைத்தியசாலைகளில் நிலவும் உட்கட்டமைப்புக் குறைபாடுகள், பேரிடர்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில், நகரை முறையான திட்டமிடலுடன் மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீடாதிபதியும் சமுதாய மருத்துவத் துறைப் பேராசிரியருமான சுரேந்திரகுமாரன் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று(26.10.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2019 முதல் முன்னெடுக்கப்படும் ஆரோக்கிய நகரத் திட்டம் யாழ்ப்பாண நகரத்தை ஆரோக்கியமான நகரமாக மாற்றும் நோக்கில் 2019ஆம் ஆண்டு முதல் “ஆரோக்கிய நகரம்” செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அபிவிருத்தி செயற்றிட்டங்கள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீடம், யாழ்ப்பாண மாநகரசபை, மாவட்டச் செயலகம் மற்றும் ஆளுநர் அலுவலகம் ஆகியன இணைந்து இத்திட்டத்தில் செயற்பட்டு வருகின்றன.
எனினும், நகரை ஆரோக்கியமான பிராந்தியமாக மாற்றுவதற்குப் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்க்கமான முடிவுகளும் நடவடிக்கைகளும் இன்னும் முழுமையாக முன்னெடுக்கப்படவில்லை எனப் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.

தீர்வின்றித் தொடரும் போக்குவரத்து நெரிசல் யாழ்ப்பாண நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக அமைக்கப்பட்ட தொலைதூரப் பேருந்து நிலையம், பல ஆண்டுகள் கடந்தும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை.
வெளிமாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் ஒதுக்கப்பட்ட இடங்களில் தரித்து நிற்காமை, புகையிரத நிலையங்கள் பொதுப் போக்குவரத்துடன் முறையாக இணைக்கப்படாமை போன்றவை நகரின் போக்குவரத்து முகாமைத்துவத்தில் காணப்படும் முக்கிய குறைபாடுகளாக உள்ளன.
தொலைதூரப் பேருந்துகள் நகர மையத்துக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதுடன், நகருக்கு வெளியே அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் வாகனத் தரிப்பிடங்களை முறையாகப் பயன்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் முடிய காத்திருக்கும் ட்ரம்ப்... மத்திய கிழக்கில் ரகசியமாகக் குவிக்கப்படும் இராணுவம் News Lankasri