யாழ். டெங்கு பரம்பல்: 35 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நுளம்பு பரம்பல் அதிகரிப்பதற்கான சுற்றுச்சூழலை உருவாக்கிய 35 பேருக்கு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் டெங்கு கட்டுபாடு செயற்றிட்டத்தினை முன்னெடுத்து செல்லும் போது பராமரிப்பற்ற காணிகள் எமக்கு பிரச்சினையாகவே உள்ளது என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலாநிதி. ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணை அலுவலகத்தில் இன்று (04.1.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பரம்பல் மிகத் தீவிரம்
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயின் பரம்பல் தற்போது மிகத் தீவிரமாகக் காணப்படுகின்றது.
கடந்த வருடத்தில் (2023) யாழ்ப்பாண மாவட்டத்தில் 3986 டெங்கு நோயாளர்கள்
இனங்காணப்பட்டதுடன், 06 இறப்புக்களும் பதிவு செய்யப்பட்டன.
இந்த வருடத்தின் முதல் 03 நாட்களிலும் புதிய நோயாளர்கள் 282 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வழக்குத் தாக்கல்
உள்ளுராட்சி மன்றங்கள் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் கொள்கலன்களைச் சேகரிக்கும் விசேட வேலைத்திட்டத்தை தற்போது முன்னெடுத்து வருகின்றன.
பொது
மக்கள் உங்கள் வீடுகளிலும் வேலைத்தலங்களிலும் பொது இடங்களிலும் உள்ள
கொள்கலன்களைச் சேகரித்து உள்ளுராட்சி மன்ற கழிவகற்றும் வாகனங்களில்
ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு முன்னறிவித்தல் வழங்கியும் ஒத்துழைப்பு வழங்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஜனவரி 02 ஆந் திகதி 12 பேருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 78 பேருக்கு எச்சரிக்கைக் கடிதம் (நோட்டீஸ்) வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி 03 ஆந் திகதி 23 பேருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 189 பேருக்கு எச்சரிக்கைக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கைக் கடிதம்
எச்சரிக்கைக் கடிதம் வழங்கப்பட்டவர்கள் குறித்த காலப்பகுதிக்குள் தமது வளாகத்தை சீர் செய்யாதுவிடின் அவர்களுக்கெதிராகவும் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
டெங்கு நோயிலிருந்து பொது மக்களைப் பாதுகாக்கவும் இறப்புக்களைத் தவிர்க்கவும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்க சுகாதார திணைக்களம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது என்பதனை மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்
இக்காலப்பகுதியில் காய்ச்சல் ஏற்பட்டால் அது டெங்கு நோயாகவும் இருக்கலாம். எனவே தாமதிக்காது உடனடியாக தகுந்த மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
கடந்த காலங்களில் மிகத்தாமதமாக வைத்திய ஆலோசனைகளை நாடிய வேளைகளில் இறப்புக்கள் ஏற்பட்டதை அவதானித்திருந்தோம்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயின் தீவிர பரம்பலைக் கட்டுப்படுத்த அனைவரும் ஒன்றிணைவோம். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு வினயமாகக் கேட்டுக்கொள்கின்றோம் என கலாநிதி. ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.




