இன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிப்பு! இலங்கையர்களுக்கு விழுந்த மற்றொரு அடி
அத்தியாவசிய பொருட்களின் ஒன்றான கோதுமை மாவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக செரண்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையான 35 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விலை அதிகரிப்பானது இன்றைய தினம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கோதுமை மாவின் விலையை ப்ரீமா நிறுவனமும் அதிகரிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளதுடன் அதற்கமைய ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் அதிகரிப்பதாக ப்ரீமா நிறுவனம் அறிவித்துள்ளதாக விற்பனை முகவர்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு, கோதுமை மா தட்டுப்பாடு, மூலப் பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் பேக்கரி தொழில்துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களில் 1,000க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும், தற்போது இயங்கி வரும் 6,000 பேக்கரிகளில் பெரும்பாலானவை தினசரி உற்பத்தியில் 50% கூட இல்லை என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்திருந்தார்.
அத்துடன், நேற்று நள்ளிரவு முதல் மீளவும் எரிபொருள் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்திருந்தது.
இதன்படி, அனைத்து விதமான டீசலில் விலையை அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்திருந்தது.
திடீரென இவ்வாறு எரிபொருள் விலையானது அதிகரிக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்திருந்த நிலையில் அதிலிருந்து மீள்வதற்குள் தற்போது திடீரென கோதுமை மாவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளமையானது இலங்கையில் மக்களுக்கு மற்றுமொரு அடியாகவே இருப்பதாக சமூக அவதானிகள் தெரிவிக்கின்றன.
மேலும், இலங்கையில் டொலர் நெருக்கடி மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு நிலையை அடுத்து பொருட்களின் விலை குறைப்பு பதிவாகாத நிலை காணப்படும் அதேவேளை தொடர்ச்சியாக பொருட்களின் விலைகள் அதிகரித்தே வருகின்றமை குறிப்பிடத்தக்கது.