நான் ஒருபோதும் அவ்வாறு சொல்லவில்லை! ஆனால் என் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது : பந்துல
என் மீது மக்களுக்கு பாரிய வெறுப்புக்கள் தோற்றம் பெற்றது. நான் ஒருபோதும் சொல்லாத விடயம் ஒன்றிற்காக எனது வீடு தீக்கிரையாக்கப்பட்டது. ஊடகங்களில் நான் அதிகளவில் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளேன் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தீக்கிரையாக்கப்பட்ட அரசியல்வாதிகளின் வீடுகள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த ஆண்டு போராட்டத்தின் போது அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன, இவர் 2,500 ரூபாவால் வாழ முடியும் என்று குறிப்பிட்டவர் ஆகவே இவரின் வீட்டுக்கு தீ வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுக் கொண்டு போராட்டகாரர்கள் எனது வீட்டுக்கு தீ வைத்தார்கள்.
ஊடகங்களினால் தான் விமர்சிக்கப்பட்டு நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டேன். ஒரு மாத செலவுக்கு 2,500 ரூபா போதும் என்று நான் ஒருபோதும் குறிப்பிடவில்லை. அவ்வாறு நான் குறிப்பிட்டதாக ஊடகங்கள் திரிபுப்படுத்தி குறிப்பிட்டு என் மீது வெறுப்பை தோற்றுவித்தன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் நான் கல்வி அமைச்சராக பதவி வகித்தேன். அப்போது கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான மாத கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஆராய்ந்து நான் அமைச்சரவைக்கு யோசனை ஒன்றை முன்வைத்து கொடுப்பனவு அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தேன்.
இதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு முதல் ஜனவரி மாதம் முதல் கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத கொடுப்பனவை 500 ரூபாவால் அதிகரித்து 3,000 ரூபா கொடுப்பனவை வழங்க அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் ஒருமாத செலவுக்கு 2,500 போதும் என்று நான் குறிப்பிட்டதாக வதந்தி பரப்பி விடப்பட்டது. இதனால் என்மீது பாரிய வெறுப்புக்கள் மக்கள் மத்தியில் தோற்றம் பெற்றது.இவ்வாறான நிலை ஊடக நெறி கொள்கைகளுக்கு முற்றிலும் விரோதமானது என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |