மின்சாதனப் பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு!
பெறுமதி சேர் வரி 15% மாக அதிகரிக்கப்பட்டமை மற்றும் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் மின் சாதனங்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
முன்னர் 3800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 100 மீற்றர் கபில மற்றும் நீல நிற கம்பியின் ஓர் உருளை தற்போது 7600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
பச்சை நிறத்திலான ஓர் உருளை கம்பியின் விலை 7600 ரூபாயில் இருந்து 19,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.
மின்குமிழ்
சராசரியாக 70 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு மின்குமிழ் தற்போது 200 ரூபாவாக உயர்ந்துள்ளது.
அதே சமயம் ஐந்து வாட் எல்.இ.டி வகை மின்குமிழ் ஒன்று தற்போது 650 ரூபாவாக உள்ளதாக விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அவை முன்னதாக 300 ரூபா என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று மடங்கு விலை அதிகரிப்பு
அதேபோன்று, பிரதான மின்சுற்றுடன் இணைக்கப்பட்டுள்ள தடையிகளின் விலையும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
அந்த உதிரிபாகங்கள் பொருத்தப்பட்டுள்ள பிரதான மின்சுற்ற தாங்கிகள் முன்பு சுமார் 700 ரூபாவுக்கு விற்கப்பட்டாலும், தற்போது 1300 ரூபாவுக்கு மேல் விற்கப்படும் சந்தர்ப்பங்களும் உள்ளன.
ஏறக்குறைய 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மின்குமிழ் மட்டும் எரியக்கூடிய ஒற்றை ஆழி தற்போது 400 முதல் 500 ரூபா என்ற வகையில் விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி
மேலும், தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, தொலைபேசி இணைப்புகள் மற்றும் இணைய தொலைத்தொடர்பு ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படும் சரடுகள் நாட்டில் உற்பத்தி செய்யப்படவில்லை என்று விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.