நுவரெலியா - நானுஓயாவில் குப்பைக்கு செல்லும் அதிக மரக்கறிகள்
கடந்த மாதங்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை மாற்றத்தால் சாதாரண மரக்கறிகளின் விலை மிகவும் உச்சம் தொட்டதால் சாதாரண மக்களால் இதனை தாக்குப்பிடிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையொன்று ஏற்பட்டுள்ளது.
தற்போது மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுவதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக நுவரெலியா மத்திய சந்தைக்கு வரும் அதிகமான நுகர்வோர் பலாக்காய், ஈரப்பலாக்காய் ,மரவள்ளிக்கிழங்கு, வட்டக்காய் போன்ற மரக்கறிகளையும் வல்லாரை, பொன்னாங்காணி, நாட்டுக்கீரை, பசளி போன்ற சாதாரண கீரை வகைகளை அதிகளவில் கொள்வனவு செய்கின்றனர்.
மரக்கறி வியாபாரிகள் விசனம்
இதனால் ஏனைய பொருளாதார நிலையங்களில் இருந்து அதிமான விலையில் மரக்கறிகளை கொள்வனவு செய்யப்பட்டு நுவரெலியா மத்திய சந்தைக்கும், நானுஓயா பிரதான நகருக்கும் கொண்டுவரப்பட்டு சிறிய இலாபத்தினை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் வியாபாரம் இன்றியும் அதிலும் பல மரக்கறிகள் இரண்டு மூன்று நாட்களின் பின் பழுதடைந்து கழிவுகள் ஏற்படுவதாகவும் இதனால் பாரிய நட்டம் ஏற்படுவதாகவும் மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், மக்கள் மிகவும் குறைந்த விலைக்கு மரக்கறிகளை கேட்கும் போது எங்களால் வியாபாரம் செய்ய முடியாத நிலையும், அதிக பணத்திற்கு சிறிய அளவிலான மரக்கறிகளை வழங்க கூடிய நிலைமை காணப்படுவதுடன், பாரிய நட்டத்தினை ஏற்படுத்தி செல்வதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.
நுகர்வோரின் வருகை
அத்துடன் வெளி மாவட்டத்தில் இருந்து அதிக விலைக்கு கொள்வனவு செய்து மரக்கறிகளை குறைந்த விலைக்கே விற்பனை செய்கின்றோம் எனவும், ஆனால் நுகர்வோரின் வருகை குறைவாகவே காணப்படுகின்றது எனவும் கவலை வைளியிட்டுள்ளனர்.
இதன்காரணமான பெருமளவிலான மரக்கறிகளை குப்பையில் போட வேண்டியுள்ளதாக அவர்கள் அங்கலாய்ந்துக்கொள்கின்றனர்.
தொடர்ந்து இவ்வாறு மரக்கறிகளை மொத்த விலைக்கு கொள்வனவு செய்து குறைவான விலைக்கு விற்பனை செய்வதால் தங்களுக்கு எந்த இலாபமும் இல்லை எனவும், மரக்கறிகளின் விலைகளில் தொடர்ச்சியாக விலைகள் அதிகரித்த வண்ணம் காணப்படும் பட்சத்தில் பொதுமக்கள் மரக்கறிகளை கொள்வனவு செய்து உண்ண முடியாத நிலை ஏற்படும் எனவும் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |