அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பு குறித்து அமைச்சரின் அறிவிப்பு
பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது என வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கு நாடுகளில் தோற்றம் பெற்றுள்ள மோதல் நிலைமைகளினால் தேசிய மட்டத்தில் எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.
உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை
மத்திய கிழக்கில் மோதல் நிலைமை தொடங்கியவுடன் அத்தியாவசிய உணவு பொருட்கள் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். கோதுமை மா உட்பட இனிப்பு உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கப் போவதில்லை என்று உற்பத்தியாளர்கள் உறுதியளித்துள்ளார்கள்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபை தொடர் சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்கும்.

உரிய நடவடிக்கைகள்
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார். அத்துடன் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளது. மஞ்சள் நிற சிலிண்டர் தடையின்றி சந்தைக்கு விநியோகிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு இல்லாவிடின் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று நுகர்வோர் அதிகாரசபை மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டர் நிறுவனத்துக்கு அறிவுறுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.