மண்ணெண்ணெய் விலையை லீட்டருக்கு 370 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை
மண்ணெண்ணெய் விலையை அதிகரிப்பது தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆராய்ந்து வருகின்றது.
இம்மாத இறுதிக்குள் மண்ணெண்ணெய்யின் விலையை அதிகரிப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் ரூ.87.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் அந்த விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய்க்கு 283.00 ரூபா வரையிலான நட்டத்தைச் சந்தித்து வருவதாக கூறப்படுகின்றது.
மண்ணெண்ணெய் விலை லீட்டருக்கு 370.00 ரூபாவாக அதிகரிப்பு
அவ்வாறு நட்டம் ஏற்படுவதைத் தடுப்பதாக இருந்தால் மண்ணெண்ணெய்யின் விலையை லீட்டருக்கு 370.00 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என கூட்டுத்தாபன அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரம் குறைந்த வருமானம் பெறுவோருக்கு தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக சலுகை விலையில் மண்ணெண்ணெய் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.