மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பா? - அறிவிப்பு வெளியானது
இலங்கைக்கு போதியளவு டீசல் கையிருப்பு கிடைத்துள்ளதுடன், எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதன் பின்னணியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐஓசி நிறுவனம் பெப்ரவரி 06ம் திகதி முதல் எரிபொருள் விலையை உயர்த்துவதாக அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் (CPC) விலையேற்றத்திற்கு செல்ல அரசாங்கத்திடம் அனுமதி கோரியது, ஐஓசி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்ததையடுத்து, நுகர்வோர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்றனர்.
இதனால் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திடமிருந்து (IOC) 40,000 மெற்றிக் தொன் எரிபொருளை இலங்கையின் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் இன்று கையளித்தார்.
எரிபொருளை உடனடியாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் (CPC) ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்தியாவிலிருந்து வந்த ‘ஸ்வர்ண புஷ்ப்’ என்ற எண்ணெய் டேங்கர் மூலம் எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.