மின் கட்டண அதிகரிப்பு குறைந்த வருமானம் பெறுவோருக்கு நெருக்கடி: சபா குகதாஸ்
மின் கட்டணமானது 2023 ஆண்டில் மூன்று தடவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர மற்றும் சாதாரண வருமானம் பெறும் மக்களை பாரிய அளவில் பாதிக்கும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (21.10.2023) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மின் கட்டணம்
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைப்பதற்கு முன்பாக முதலாம் கட்டமாக பல வரிகள் கட்டணங்கள் அதிகரித்தன. பின்னர் நாணய நிதியத்தின் முதல் கட்ட நிதி கிடைத்ததும் இரண்டாம் கட்ட கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதுடன் தற்போது இரண்டாம் கட்ட நிதி கிடைப்பதற்கு முன்பாக மூன்றாம் கட்ட வரிகள் கட்டணங்கள் அதிகரித்துள்ளன.
எதிர்காலத்தில் எத்தனை தடவை கடன் பெறப்போகிறார்களோ அதற்கு மேலாக வரிகளும் கட்டணங்களும் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளன.
நாட்டின் வருமான மார்க்கங்கள் வீழ்ச்சியடைந்த நிலையில் தொடர்ச்சியான கடன் பெறுகையும் உள்நாட்டு கட்டண மற்றும் வரிகளின் அதிகரிப்புக்கள் ஒரு போதும் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டெழ வழி திறக்கப் போவதில்லை.
அத்தோடு மக்களின் வருமானத்தில் முன்னேற்றங்கள் இல்லாமல் அவர்களின் வாழ்வாதார சுமைகளை அதிகரிப்பதால் நாட்டில் வருமை நிலையே மேலும் தலை தூக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.