மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பினால் புத்தளம் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு (Video)
புத்தளம் - சேராக்குளி மற்றும் கரைத்தீவு ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் தமது ஜீவனோபாயமாக கடற்தொழிலையே மேற்கொண்டு வருகின்ற நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மண்ணெண்ணெய்யின் விலையேற்றம் காரணமாக தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
மண்ணெண்ணெய்யின் விலையேற்றம் காரணமாக கடந்த மூன்று மாதகாலமாக மீன்பிடித் தொழிலை பலர் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கடற்தொழிலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதில் ஒரு சிலர் தெப்பத்தில் சென்று மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு
முன்பு இயந்திரப் படகிற்கு 5000 ரூபா கொடுத்து 40 லீட்டர் மண்ணெண்ணெய்யைப் பெற்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டால் சுமார் 10,000 ரூபாவிற்கு அதிகமான வருமானம் வந்ததாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் தற்பொழுது 17,000 ரூபா கொடுத்து 40 லீட்டர் மண்ணெண்ணெய்யைப் பெற்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டால் தமக்கு 10,000 ரூபா வருமானமே கிடைப்பதாக கடற்தொழிலாளர்கள் அங்கலாய்கின்றனர்.
விசனம் தெரிவிக்கும் கடற்தொழிலாளர்கள்

முன்பு 2 இலட்சம் ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரப் படகு தற்பொழுது 6 இலட்சம் ரூபாவிற்கும் மேலாக அதிகரித்துள்ளதாகவும், இயந்திரங்களின் விலைகளும் மூன்று மடங்கு வரை அதிகரித்துள்ளதாகவும் கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தற்போதைய புதிய அரசாங்கம் மானிய விலையில் தமக்கு மண்ணெண்ணெய்யை வழங்க வேண்டுமென்றும், இயந்திரங்கள் மற்றும் வலைகளின் விலைகளை குறைக்க வேண்டுமென்றும் அப்பகுதி கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


