மட்டக்களப்பில் செயலிழந்து காணப்படும் எரிபொருள் நிரப்பு நிலையம்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
மட்டக்களப்பு- கல்லாறு, காத்தான்குடி கடற்கரை பகுதியில் பல இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட மண்ணெண்ணெய் மற்றும் டீசல் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் செயலிழந்து இயங்காத நிலையில் உள்ளதால் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு,கடற்றொழிலாளர்கள் தமது படகுகளுக்கு எரிபொருளை நிரப்புவதற்கு பல மைல் தூரம் செல்ல வேண்டி உள்ளதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி காலத்தில் மகிந்த ராஜபக்சவினால் தேசத்துக்கு மகுடம் திட்டத்தில் ஜ.நா. அபிவிருத்தி திட்டம் (யு.என்.டி.பி) நிதி அனுசரனையுடன் கிழக்கு மாகாணத்தில் கடற்கரை பகுதியில் 9 மண்ணெண்ணை எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு கடற்றொழில் சங்கங்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
செயலிழந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம்
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லாறு, மற்றும் காத்தான்குடியில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தை கடற்றொழில் சங்கங்கள் தனியார்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கி இயங்கி வந்தது.

இந்த நிலையில் குத்தகை அடிப்படையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தை பெற்றுக் கொண்டவர்கள் சிறிது காலம் செயல்படுத்திய பின்னர் அதனை செயல்படுத்த முடியாமல் அதனை நிறுத்தி விட்டு வெளியேறினர்.
அதனை தொடர்ந்து இரு எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எரிபொருள் நிரப்பு இயந்திரத்தின் மோட்டார் உள்ளிட்ட பாகங்கள் திருடப்பட்டு கட்டிடம் பாழடைந்து எரிபொருள் நிரப்பு தாங்கிகள் உள்ளிட்ட பொருட்கள் துருப்பிடித்து மரங்கள் வளர்ந்து காடுகள் போல காட்சியளிக்கிறது.
கோரிக்கை
இந்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறித்து சம்பந்தப்பட்ட கடற்றொழில் திணைக்களம் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன், இவர்களுக்கும் வெளியில் உள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் ஏதேனும் ஒப்பந்தம் செய்தார்களா, இதனால் இதனை இயங்காமல் செய்தார்களா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது என கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக வெறும் வெட்டிப் பேச்சுக்கள் பேசுவதை விடுத்து கடந்த 15 வருடங்களாக இயங்காது இருக்கும் இதனை இயங்க செய்து கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.