வடக்கு - கிழக்கு பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள கவனயீர்ப்பு போராட்டங்கள் (video)
கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒருமித்து செயல்படக் கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி தருமபுரம் ஏ-35 வீதியின் மத்திய கல்லூரி முன்பாக நான்காவது நாளாக இன்று (08-01-2023) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரண்டு செயல்படக் கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களை ஒன்றிணைத்து கடந்த 05ஆம் திகதி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் தீர்விற்கான நடவடிக்கை
இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழ் அரசியல் கட்சிகள் இடையே அரசியல் தீர்விற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள் ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு ஒரு தனி மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள்க போன்ற பல்வேறு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பில் ஜனாதிபதியுடன் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளில் தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு கோரியும், சமஸ்டியுடனான தீர்வினை வழங்ககோரியும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இன்று (08.01.2023) நான்காவது நாளாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தினை தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் தமிழரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும் என தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவு மற்றும் இணைந்த வடகிழக்கில் தமிழ் மக்களுக்கான சமஸ்டி தீர்வு குறித்து இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியிலும் ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒருமித்து செயல்படக் கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பரந்தன் முதன்மை வீதியில் வள்ளிபுனத்தில் ஒன்று கூடிய மக்கள் தங்கள் கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
கிளிநொச்சி- பூநகரி வாடியடி பகுதியிலும் இன்று சமஸ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒருமித்து செயல்படக் கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளையும் ஓரணியில் திரளுமாறு வலியுறுத்தி
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன கவனயீர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளாக
யாழ்ப்பாணம் நாவற்குழியில் இன்று இடம்பெற்றது.






