இலங்கையில் பாரிய நிதி மோசடியில் சிக்கிய இசுரு பண்டார விளக்கமறியலில்
கோடிஸ்வர வர்த்தகர்களிடம் நிதி மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் மாற்று கணவர் எனக் கூறப்படும் இசுரு பண்டார என்ற அவரது வர்த்தக பங்காளியை நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஷிலனி பெரேரா இன்று உத்தரவிட்டுள்ளார்.
பிணை வழங்க வேண்டாம் என கேட்டுக்கொண்ட சி.ஐ.டியினர்
சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவில்லை என்பதால், சந்தேக நபருக்கு பிணை வழங்க வேண்டாம் என குற்றவியல் விசாரணை திணைக்களம் விடுத்த கோரிக்கையை கவனத்தில் கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இசுரு பண்டாரவை குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் நேற்று கைது செய்தனர். அவரிடம் 9 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.
வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர், கைது செய்யப்பட்ட இசுரு பண்டார இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பல மடங்கு இலாபம் பெறலாம் என வர்த்தகர்களை ஏமாற்றி பண மோசடி
திலினி பிரியமாலியின் கணவர் என அறிமுகப்படுத்தி பலருடன பழகிய வந்த அசுரு பண்டார, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் செயலாளராக பணியாற்றியவர் எனவும் கூறப்படுகிறது.
இந்த சந்தேக நபர் பல மடங்கு இலாபம் பெற்று தருவதாக கூறி திலினி பிரியமாலியுடன் இணைந்து வர்த்தகர்களிடம் பல மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இசுரு பண்டார திலினி பிரியமாலியின் சட்ட ரீதியற்ற கணவர் எனவும் கூறப்படுகிறது.



