ஹட்டன் மக்கள் 25 வருட காலமாக மழைக்காலங்களில் எதிர்நோக்கும் கடும் நெருக்கடி! அதிகாரிகள் அசமந்தம் (video)
ஹட்டன் நகரில் சுமார் 25 வருட காலமாக மழைக்காலங்களில் கால்வாய்கள் நிரம்பி கழிவு நீர் ஆறு போல் காட்சியளிப்பதாகவும் மக்கள் வீதியினை கடக்க முடியாது பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பேருந்து தரிப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள பிரதான வீதியும் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியும் மழை நேரங்களில் நீரால் மூழ்கியுள்ளன.இதனால் பாதையில் நடந்து செல்லும்போது மக்கள் மற்றும் வாகன சாரதிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
மாணவர்களுக்கு நோய் தொற்றும் வாய்ப்பு
பாடசாலை செல்லும் மாணவர்கள் குறித்த வீதியை கடக்கும் போது தங்களுடைய பாதணிகள் மற்றும் சீருடைகள் அழுக்கடைவதாகவும் கால்வாயில் உள்ள கழிவுகள் கலந்த நீரில் நடந்து செல்வதனால் நோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்.
இந்த பிரச்சினைகள் குறித்து ஹட்டன் நகர சபைக்கு பல தடவைகள் பொது மக்கள் முறைபாடுகள் மேற்கொண்ட போதிலும் அது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
மாவட்ட அரசியல் பிரதிநிதிகள் கவனத்திற்கு
நுவரெலியாவின் நுழைவாயிலாக காணப்படும் ஹட்டன் நகரம் மலையகத்தின் பிரதான நகரமாக காணப்படுவதாகவும் சிவனொளிபாதமலை செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்லும் ஒரு நகரமாக காணப்பட்ட போதிலும் இது குறித்த எவ்வித அக்கறையுமின்றி இருப்பது மிகவும் கவலையளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் ஹட்டன் நுவரெலியா மாவட்டத்தின் மிக முக்கிய நகரம்
என்பதனால் நுவரெலியா மாவட்டத்தின் அரசியல் பிரதிநிதிகள் இந்த பிரச்சினைக்கு
உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
