கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு இம்ரான் எம்.பி கடிதம்
கிண்ணியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் பல்வேறு நிதி வளங்கள் இருந்தும் தற்போது வங்குரோத்து நிலை அடைந்தமை குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, கூட்டுறவு அமைச்சு செயலாளருக்கு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் மேலும்,
தொடர்ச்சியான நிர்வாகப் பலவீனம் காரணமாக கிண்ணியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் தற்போது மிகவும் வங்குரோத்து நிலையில் இருப்பதாக பொதுமக்கள் பலர் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
இச்சங்கத்திற்கு சொந்தமான கிளைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளன. இதற்குச் சொந்தமான லொறிகள், உழவு இயந்திரங்கள் என்பன கடந்த காலங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கிண்ணியா நகர் பகுதியில் இருந்த இச்சங்கத்திற்குரிய பெறுமதிமிக்க காணி மக்கள் வங்கிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இதன் மூலதனம் அனைத்தும் எங்கே சென்றது என்ற கேள்வி உள்ளது.
இங்கு தொடர்ச்சியாக பாரிய ஊழல் இடம்பெற்று வந்தும் அதிகாரிகள் இதனைக் கண்டும் காணாதது போல் இருந்துள்ளமை தெளிவாகத் தெரிவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. இச்சங்கம் இந்தளவு வங்குரோத்து நிலையை அடைந்தமைக்கு கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் கவனயீனமே பிரதான காரணம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த விடயங்களைக் கவனத்தில் எடுத்து கிண்ணியா பலநோக்குக் கூட்டுறவுச்
சங்கம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்த தேவையான நடவடிக்கை எடுக்குமாறு
கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan