இந்தியாவின் தனியார் நிறுவனங்களுக்கு குடியிருப்பு காணிகளை வழங்க முயற்சி: இம்ரான் எம்.பி கள விஜயம்
திருகோணமலை(Trincomalee) - முத்துநகர் பிரதேசத்திலுள்ள விவசாய காணிகளை இந்தியாவின்(India) சில தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கும் பிரச்சினை தொடர்பில் தீர்வு காண நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்(Imran Maharoof) கள விஜயம் மேற்கொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
திருகோணமலை - முத்துநகர் பிரதேசத்தில் பல தசாப்தங்களாக பொதுமக்கள் குடியிருந்து வரும் நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கர் குடியிருப்பு மற்றும் விவசாய காணிகளை இந்தியாவின் சில தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கும் நோக்குடன் அக் காணிகளில் வசித்துவரும் மக்களை அப்பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு இலங்கை துறைமுக அதிகார சபை அறிவித்துள்ளது.
1984 ஆம் ஆண்டு வர்த்தமானி
இதனை அடுத்து, அங்கு எழுந்துள்ள பதற்ற நிலை தொடர்பாக ஆராயும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குறித்த பகுதிக்கு நேற்று(25.05.2024) சென்று குறித்த பிரதேச மக்களுடன் இது தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
இந்த பகுதியில் பல தசாப்தங்களாக மக்கள் குடியிருந்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த காணிகள் 1984 ஆம் ஆண்டு வர்த்தமானி மூலம் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமானவை என அறிவிக்கப்பட்டமையை தொடர்ந்தே இந்த பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது.
எனவே, இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை காணும் நோக்கில் அமைச்சு மற்றும் அதிகாரிகளுடனும் கலந்துரையாட உள்ளதாக இம்ரான் மகரூப் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில், பட்டினமும் சூழலும் பிரதேச சபை முன்னாள் உப தவிசாளர் நௌபர் உள்ளிட்ட பிரதேச மக்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |