மருத்துவப் பரிசோதனை முடிந்தது..மீண்டும் அடியாலா சிறைக்கு சென்ற இம்ரான் கான்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா இன்டர்நேஷனல் வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் அடியாலா சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் செய்தித் தொடர்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மீண்டும் சிறை
வைத்தியசாலையில் கண் வைத்தியர், இதயநோய் நிபுணர் மற்றும் பொது வைத்தியர் உள்ளிட்ட வைத்தியர்கள் அடங்கிய குழு அவரை விரிவாகப் பரிசோதித்ததாகவும், அவர் சிறையில் தொடர்ந்து இருப்பதற்கு மருத்துவ ரீதியாக தகுதியானவர் என வைத்தியவர்கள் தெரிவித்ததாகவும் பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தாரார் தெரிவித்துள்ளார்.
73 வயதான இம்ரான் கான், உடல்நல பிரச்சினைகள் காரணமாக வைத்திய சிகிச்சை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஒகஸ்ட் 20ஆம் திகதி நள்ளிரவில் வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதும், அங்கிருந்து மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அவர் மீண்டும் சிறை அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், இம்ரான் கானின் உடல்நிலை சிறையில் மோசமடைந்துள்ளதாகவும், அவரது வலது கண்ணின் பார்வை கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்ரான் கானின் உடல்நிலை
செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவில், இம்ரான் கானை 48 மணி நேரத்திற்குள் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா இன்டர்நேஷனல் வைத்தியசாலைக்கு மாற்ற வேண்டும் என்றும், அவரது தனிப்பட்ட வைத்தியர் உள்ளிட்ட மருத்துவக் குழுவை அணுகுவதற்கு அவருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், இம்ரான் கானுக்கு உடனடி சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவ அறிக்கைகள் எதுவும் தெரிவிக்கவில்லை என பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.
#BREAKING
— Nabila Jamal (@nabilajamal_) August 21, 2026
Imran Khan shifted to hospital
Former Pakistan PM Imran Khan has been moved from Rawalpindi’s Adiala Jail to Shifa International Hospital in Islamabad under heavy security
The transfer came after Pakistan’s Supreme Court ordered a medical examination by a panel… pic.twitter.com/hAn6BnkKMJ
மேலும், தனியார் வைத்தியசாலைக்கு பதிலாக அரசு வைத்தியசாலையிலேயே அவரது மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என சட்ட அமைச்சர் அசாம் நசீர் தாரார் வலியுறுத்தியிருந்தார்.
உயர்நீதிமன்ற உத்தரவை அரசு செயல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்போவதாக PTI எச்சரித்ததைத் தொடர்ந்து, இம்ரான் கான் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இம்ரான் கான் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒகஸ்ட் முதல் சிறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.