இம்ரான் கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க கிரிக்கெட் முன்னோடிகள் கோரிக்கை
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் தலைவருமான இம்ரான் கானிற்கு மனிதநேய அடிப்படையிலான சிகிச்சையும் முறையான மருத்துவப் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் தலைவர்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 21 முன்னாள் கிரிக்கெட் தலைவர்கள் கையொப்பமிட்டு பாகிஸ்தான் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், சிறையிலுள்ள 73 வயதான இம்ரான் கானின் உடல்நிலை குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.
கடிதத்தில் கையெழுத்திட்ட முன்னாள் வீரர்கள்
சுயாதீன மருத்துவக் குழு மூலம் அவரது உடல்நிலையை பரிசோதிக்க அனுமதிப்பதுடன், அவரது குடும்பத்தினர் அவரை வாராந்தம் சந்திப்பதற்கான வாய்ப்பை தடையின்றி வழங்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான சுனில் கவாஸ்கர், கபில் தேவ், திலீப் வெங்சர்க்கார் மற்றும் இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க உட்பட பல முன்னணி சர்வதேச வீரர்கள் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

இருப்பினும், பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எவரும் இதில் கையொப்பமிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த மூன்று வருடங்களாக சிறை வைக்கப்பட்டுள்ள இம்ரான் கானை, இஸ்லாமாபாத்திலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு மாற்றுமாறு அந்நாட்டு உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
எனினும், அவர் அரசு வைத்தியசாலை ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது