நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள இம்ரான் கான்
பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான முயற்சிகளுக்காக அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
கடந்த டிசம்பரில் நிறுவப்பட்ட பாகிஸ்தான் உலக கூட்டணியின் உறுப்பினர்கள் மற்றும் நோர்வே அரசியல் கட்சியான பார்ட்டியேட் சென்ட்ரமைச் சேர்ந்தவர்கள், 72 வயதான கானின் பரிந்துரையை அறிவித்தனர்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, பரிந்துரைக்கும் உரிமையுள்ள தரப்புடன் கூட்டணி வைத்து, பாகிஸ்தானில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான பணிக்காக அமைதிக்கான நோபல் பரிசுக்கு அவரை பரிந்துரைத்துள்ளதாக நோர்வேயின் அரசியல் கட்சி தெரிவித்துள்ளது.
எட்டு மாத செயன்முறை
2019ஆம் ஆண்டில், தெற்காசியாவில் அமைதியை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்காகவே கான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
ஒவ்வொரு ஆண்டும், நோர்வே நோபல் குழு, நூற்றுக்கணக்கான பரிந்துரைகளைப் பெறுகிறது. அதன் பின்னர் எட்டு மாத செயன்முறை மூலம் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் நிறுவனரான முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், ஒகஸ்ட் 2023 முதல் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.
மூன்று குற்றச்சாட்டுக்கள்
அதிகார துஸ்பிரயோகம் மற்றும் ஊழல் தொடர்பான வழக்கில் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நான்காவது பெரிய வழக்கு இதுவாகும்.
ஏற்கனவே, அரச பரிசுகளை விற்றல், அரச இரகசியங்களை கசியவிட்டமை மற்றும் சட்டவிரோத திருமணம் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுக்களில் அவருக்கு தண்டனைகள் வழங்கப்பட்டு பின்னர் அவை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
