பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்
அமைதியாக இடம்பெற்ற பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் முன்வீதி கனரக வாகனங்கள் செல்வதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேச சபையின் மாதாந்த அமர்வு அதன் தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் நேற்று(29.10.2025) இடம்பெற்றது.
பாடசாலை நேரங்களில் கனரக வாகனங்கள்
அந்த சபை அமர்வில் முதலாவதாக சென்றகூட்ட அறிக்கை முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து பருத்தித்துறை நகரசபை மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை என்பன இணைந்து கழிவுகளை ஓரித்தில் கொட்டி தரம்பிரிப்பது தொடர்பாக ஆராயப்பட்டு பருத்தித்துறை பிரதேச சபை நகரசபையுடன் இணையாது தனியாகவே கழிவை தரம்பிரிப்பது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

வரவு செலவு திட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும், பருத்தித்துறை பிரதேச சபைக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகள் அதன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் சபையில் ஆராயப்பட்டது.
வீதிப் போக்குவரத்துக்கு பாதிப்பாகவுள்ள மரங்கள், மற்றும் கட்டுமானங்களை அகற்றுவது தொடர்பாக ஆராயப்பட்டு வீதிப் பயணிகளுக்கு இடையூறாகவுள்ள கட்டுமானங்கள் மற்றும் மரங்களை அகற்றுவதற்க்கு உரியவர்களுக்கு அறிவித்தல் வழங்கி அவற்றை அகற்ற நடவடிக்கை எடுப்பதென்றும்,
பாடசாலை நேரங்களில் கனரக வாகனங்களை தடைசெய்வது தொடர்பாக ஆராயப்பட்டு காலை 6:30 தொடக்கம் 8:00 மணிவரையிலும், பிற்பகல் 12:30 தொடக்கம் 2:30 மணிவரையிலும் கனரக வாகனங்கள் செல்வதை தடை செய்வதென்றும், உரிய அறிவித்தல் பதாதைகள் இடுவதென்றும்,
மாணவர்களுக்கு கொடுப்பனவுகள்
மந்திகையிலுள்ள பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை முன்வீதியால் கனரக வாகனங்கள் செல்வதை முற்றாக தடை செய்வதென்றும், பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குள் பற்றைக்காடுகளாக காணப்படுகின்ற தனியார் காணிகளின் உரிமையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்குதல் மற்றும் காணிகளை சுவீகரித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வதென்றும்,
தொடர்ந்து நிதிக்குழு கூட்ட அறிக்கை சபையில் ஆராயப்பட்டு பல்வேறு நிதிக் கொடுப்பனவு அங்கீகார தீர்மானங்களும், வறுமைக்கோட்டிற்குட்பட்ட நூறு மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்குவதென்றும்,
மருதங்கேணி சந்தி பகுதியிலுள்ள ஓய்வகத்துடன் கூடிய மதுபான நிலையத்திற்க்கான இதுவரை காலமும் செலுத்தாமலுள்ள நிலையில் அதனை முழுமையாக பெற்றுள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும்
போக்கறுப்பு பகுதியில் இராணுவத்தால் நடாத்தப்படுகின்ற ஓய்வகத்துடன் கூடிய மதுபான விற்பனை நிலையத்திலிருந்தும் இதுவரை வரி எதுவும் செலுத்தவில்லை எனவும் அதனையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், பாலூட்டும் தாய்வருக்கான அன்பளிப்பு வழங்குவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும் சபை அமர்வில் 20 உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

