வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு
முறையான ஆவணங்களின்றி இரண்டு பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்ப முயன்ற பெண் ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கைது செய்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பக்வந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இரண்டு பெண்களை சுற்றுலா விசாவில் மலேசியாவிற்கு அனுப்ப முயன்ற குற்றச்சாட்டில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் நேற்று (16.09.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
குறித்த இரு பெண்களும் மலேசியாவில் வீட்டு வேலைக்கு அனுப்புவதற்காக விமான நிலையத்தை விட்டு வெளியேற முற்பட்ட போது பாலர் பாடசாலை ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபரை ஹட்டன் பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய பின்னர், 05 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இம்மாதம் 18ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே வெளிநாடு செல்ல காத்திருப்போர் தங்கள் ஆவணங்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.