அஸ்வெசும சலுகைக்காக பதிவு செய்தவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
நலன்புரி கொடுப்பனவுகளை பெற தகுதியான பயனாளிகளின் பட்டியலைப் புதுப்பிக்க நலன்புரி நன்மைகள் சபை முடிவு செய்துள்ளது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டில் அரசு நலன்புரி கொடுப்பனவுகளை எதிர்பார்த்து சமூகப் பாதுகாப்பு தகவல் பதிவேட்டில் பதிவு செய்து தகவல்களை வழங்கிய அனைத்து நபர்களின் தகவல்களையும் புதுப்பிப்பது 10 ஆம் திகதி முதல் தொடங்கும் என்று சபை அறிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் அஸ்வெசும சலுகையைப் பெற விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த 3.4 மில்லியன் மக்களில், ஒரு மில்லியன் மக்கள் அஸ்வெசும சலுகையைப் பெற முறைப்பாடுகளைச் சமர்ப்பித்துள்ளதாக கூறியுள்ளனர்.
2023 ஆம் ஆண்டில் அஸ்வெசும சலுகைக்கு விண்ணப்பித்த 3.4 மில்லியன் மக்களுக்கு இந்த மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை மீண்டும் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தலைவர் நிமல் கொத்தவலகெதர தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும சலுகையின் முதல் கட்ட பதிவு
இதற்கமைய, அஸ்வெசும சலுகைக்காகப் பதிவு செய்த அனைவருக்கும் மீண்டும் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தலைவர் கூறியுள்ளார்.
அஸ்வெசும சலுகையின் முதல் கட்ட தகவல்களை மீண்டும் சரிபார்க்கும் செயல்முறை குறித்து ஊடகங்களுக்குத் தெரிவிக்க நேற்று (06) அரசாங்க தகவல் துறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் அல்லது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிரதேச செயலகங்களில் சமர்ப்பிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

விண்ணப்பங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்யும் வாய்ப்பு
இதன்படி கிராம அலுவலர் அலுவலகங்களில் இருந்து விண்ணப்பங்களைப் பெறலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
www.eservices.wbb.gov.lk என்ற இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் விண்ணப்பங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் தலைவர் கூறியுள்ளார்.
2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நலன்புரித் திட்டத்தின் மூலம் சுமார் 1.7 மில்லியன் மக்கள் பயனடைந்து வருவதாகவும், நலத்திட்டங்களுக்குத் தகுதியானவர்கள் உரிய சலுகைகளைப் பெறவில்லை என்ற முறைப்பாடுகள் தொடர்ந்து பெறப்படுவதாகவும் பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சர் நிஷாந்த ஜெயவீர தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |