அரசாங்க ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
அரசாங்க ஊழியர்களை வாரத்தில் 5 நாட்கள் பணிக்கு அழைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, அரசாங்க ஊழியர்களை அழைப்பது கட்டுப்படுத்தப்பட்டது.
எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி ஓரளவுக்கு தணிக்கப்பட்டு, பொது போக்குவரத்து சேவைகள் இயங்கி வருவதால், வாரத்தின் ஒவ்வொரு வேலை நாட்களிலும் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்கள், அரச அலுவலகங்களுக்கு செல்கின்றனர்.
வழமைக்கு திரும்பும் அரச சேவைகள்
அதற்கமைய, அரச அலுவலகங்களின் செயற்பாடுகளை வழமையாகப் முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால், காலதாமதத்தைக் குறைக்கும் வகையில், வாரத்தின் ஐந்து நாட்களும் அரசாங்க ஊழியர்களை பணிக்கு அழைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு, கடந்த ஜுலை மாதம் 24ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்கு அரச ஊழியர்களை அழைப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
எரிபொருள் நெருக்கடி
குறித்த கால அவகாசம் முடிவடைந்ததன் பின்னர், நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு வாரத்தின் ஐந்து நாட்களிலும் அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.
எப்படியிருப்பினும் மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டத்திலான கடமை தேவைகளை கருத்தில் கொண்டு வாரத்தின் ஐந்து நாட்களும் பணிபுரிய உத்தியோகத்தர்களை அழைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட செயலாளர்களுக்கு ஏற்கனவே பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.