வெடுக்குநாறி ஆலய சர்ச்சை - அமைச்சர்கள் வெளியிட்ட முக்கிய தகவல் (video)
இலங்கையில் பெரும் சர்ச்சையாக மாறியுள்ள வவுனியா, நெடுங்கேணி- வெடுக்குநாறி மலைக்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் இன்று சென்று பார்வையிட்டனர்.
மலையில் இருந்த ஆலயத்தில் உடைத்து வீசப்பட்ட சிவலிங்கம் உட்பட ஏனைய விக்கிரகங்களை மீள பிரதிஷ்டை செய்வதற்கான சாத்தியங்களை பற்றி ஆராய்ந்தனர்.
வெடுக்குநாறி மலையில் மீள விக்கிரகங்களை தற்போது பிரதிஷ்டை செய்வதற்கு முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் இருப்பதால், சட்டத்துக்கு மதிப்பளித்து, தீர்ப்பு வெளியான பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
ஆலய நிர்வாகத்துடன் கலந்துரையாடியதுடன் ஆலய நிர்வாகத்திடம் உரிய ஆவணங்கள் இருக்கவில்லை. அவற்றை ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா, நெடுங்கேணி - வெடுக்குநாறி மலைக்கு இன்று விஜயம் செய்தேன். ஆலய நிர்வாகம் உட்பட பிரதேச வாசிகளுடன் கலந்துரையாடினேன்.
இவ்விவகாரம் தொடர்பில் வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்றன. அவற்றின் தீர்ப்பு எதிர்வரும் 10 ஆம் திகதி வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதன்பின்னரே அடுத்தக்கட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்படும்.
நானே சிவலிங்கத்தை ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைப்பேன். உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதனால் ஆவணங்களை கோரியுள்ளேன்.
சமய முக்கியத்துவம் வாய்ந்த இடமாக வெடுக்குநாறி உரிய ஆவணங்கள் மற்றும் அங்கீகாரத்தை சட்டப்பூர்வமாக பெற நடவடிக்கை எடுக்கப்படும் நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் குறித்து பேசப்படும்.
இவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறாமல் தடுப்பதற்கான பொறிமுறையொன்றை அமைக்குமாறு கோரவுள்ளேன். இப்படியான சம்பவங்கள் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தக்கூடும். எனவே, உரிய விசாரணையை நடத்துமாறு பொலிஸாரிடமும் கோரியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.




