கூட்டுக்கான தேவையையே தேர்தல் முடிவுகளில் தமிழ் மக்கள் உறுதி செய்துள்ளார்கள்!
Courtesy: ஐ.வி.மகாசேனன்
2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் வெளிப்பார்வையில், தமிழ் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளின் வெற்றியின் ஊடாக தமிழ் தேசியத்தின் எழுச்சியையும் மாறாக நாடளாவிய ரீதியில் ஜே.வி.பி பரிணாமமாகிய தேசிய மக்கள் சக்தியின் வீழ்ச்சியும் அடையாளப்படுத்தப்படுகின்றது.
எனினும் உள்ளார்ந்த பார்வையில் இரண்டு போக்குகளும் முழுமை பெறவில்லை என்பதே நிதர்சனமானதாகும். வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளின் வெற்றி, தமிழ்த்தேசியத்தை அளவீடு செய்ய போதுமானதாக அமையவில்லை.
தமிழ்ப்பரப்பில் அதிகூடிய ஆசனங்களை பெற்றுள்ள தமிழரசுக்கட்சி, கடந்த காலங்களில் தென்னிலங்கை கட்சிகளில் ஆதிக்கம் செலுத்திய பலரையும் இம்முறை தமது வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கியிருந்தது. மேலும் தேசிய மக்கள் சக்தி தமிழர் சபைகளில் முன்னிலையை பெறாத போதிலும், தாக்கம் செலுத்தக்கூடிய வகையில் ஆசனங்களின் எண்ணிக்கையை உள்ளூராட்சி சபைகளில் உருவாக்கியுள்ளது.இக்கட்டுரை உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளில் ஈழத்தமிழர்களின் அரசியல் வெளிப்பாட்டை அடையாளங் காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவு
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னரான தமிழ் அரசியல் கள நிலைமைகளில் வெகுவான மாற்றத்தை தேர்தல் முடிவுகளுக்கு பின்னரான சூழ்நிலைகள் வெளிப்படுத்துகிறது. தேர்தல் முடிவுகளில் வடக்கு-கிழக்கு தமிழர் சபைகளில் 37இல் தமிழரசுக்கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளதுடன், 03 சபைகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையும் பெரும்பான்மை பெற்றுள்ளது.
இதனை தவிர ஒருசில சபைகளில் இரு கட்சிகளும் சமநிலை பெற்றுள்ளது. சாவகச்சேரி நகர சபையில் தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ்த் தேசிய பேரவை 6 ஆசனங்களுடன் சமநிலையைப் பெற்றுள்ளது. மேலும் கணிசமான சபைகளில் எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை உறுதி செய்ய முடியவில்லை. கூட்டணி மூலமே ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது.
எடுத்துக்காட்டாக யாழ்ப்பாணம் மாநகர சபையில் மொத்த ஆசனங்கள் 45இல் அறுதிப் பெரும்பான்மையை பெற 23 ஆசனங்கள் தேவைப்படுகிறது. எனினும் முன்னிலையை பெற்றுள்ள தமிழரசு கட்சி 13 ஆசனங்களையும், இரண்டாம் நிலையில் தமிழ்த் தேசியப் பேரவை 12 ஆசனங்களையும் பெற்றுள்ளதுடன். மூன்றாம் மற்றும் நான்காம் நிலைகளில் தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி 04 ஆசனங்களையும் பெற்றுள்ளது.
வவுனியா மாநகர சபையில் ஜனாநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, தேசிய மக்கள் சக்தி மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி ஆகியவை தலா 04 ஆசனங்களை பெற்றறுள்ளது. அறுதிப் பெரும்பான்மைக்கு 11 ஆசனங்கள் தேவைப்படுகின்றது. தமித்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளிடையியே தமிழரசுக் கட்சி 03 ஆசனத்தையும், தமிழ்த் தேசியப் பேரவை 01 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளது.
இவ்வாறான நிலைமைகளே வடக்கு-கிழக்கின் பல சபைகளிலும் காணப்படுகின்றது. மட்டக்களப்பு மாநகர சபையில் மொத்தம் 34 ஆசனங்களில் அறுதிப் பெரும்பான்மைக்கு 18ஆசனங்கள் தேவைபடும் நிலையில் தமிழரசுக்கட்சி 16 ஆசனங்களை பெற்றுள்ளமை ஒப்பீட்டளவில் பாதுகாப்பானதாகும். இரண்டாம் நிலையில் தேசிய மக்கள் சக்தி 09 ஆசனங்களையும், முறையே சுயேட்சைக்குழு ஒன்று 04 ஆசனங்களையும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 03 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 02 ஆசனங்களையும் பெற்றுள்ளது.
தேர்தல் முடிவுகளை ஜனரஞ்சகமான பார்வையில், பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளுக்கு ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து மீள்ச்சி பெற்றுள்ளது என சாதாரணமாக கடந்து விட முடியாது. அது விடுதலைக்காக போராடும் தேசிய இனத்துக்கும் பொருத்தமான வழிமுறையாக அமையாது. தேர்தல் முடிவுகளின் அரசியல் வெளிப்பாடுகளை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது.
நாடாளுமன்றத் தேர்தல்
முதலாவது, தமிழ் மக்கள் தேசியத்துக்கான உறுதியான முடிவை தொடர்ச்சியாக வெளிப்படுத்தியுள்ளார்கள். தமிழ் மக்கள் நீண்ட காலமாக தமது சுயநிர்ணய உரிமைக்கு போராடும் தேசிய இனமாக, கொள்கையின் பக்கமும் தேசிய நிலையிலும் உறுதியாகவே இருந்து வந்துள்ளார்கள். தமது கொள்கையினை வென்றெடுப்பதற்கு அணுகுமுறைகளில் சில சந்தர்ப்பங்களில் மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளார்கள்.
அத்தகையதொரு அணுகுமுறை மாற்றமே நாடாளுமன்றத் தேர்தலில் தென்னிலங்கை சார்பாக தேசிய மக்கள் சக்திக்கு குவிந்த வாக்குகளாகும். எனினும் தமிழ் மக்களின் இலக்கு சுயநிர்ணய உரிமை சார்ந்த நிலையான தீர்வினை அடிப்படையாகக் கொண்ட கொள்கையாகவே அமைந்திருந்தது.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களிலும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இவ்வாறான பின்னணியிலேயே நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அமையப்பெற்றது. எனினும் ஆட்சியதிகாரத்தில் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற எத்தகையதொரு முன்முயற்சியையும் மேற்கொண்டிருக்கவில்லை.
கடந்த கால அரசாங்கங்களின் மகாவம்ச மனநிலையிலான அரசியல் கலாசாரத்தையே தேசிய மக்கள் சக்தியும் பின்பற்றியிருந்தார்கள். இவ்வாறான பின்னனியிலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் பொது எதிரியை சரியாக இனங்கண்டு, பொது எதிரியை தோற்கடிக்கும் வகையிலான தேர்தல் முடிவினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
நாடாளுமன்றத்தேர்தலில் தமிழ் மக்களின் வாக்கினை பெற்றதை தமது சாதனையாக சர்வதேச அரங்குகளில் பிரச்சாரப்படுத்திய தேசிய மக்கள் சக்தி, தமிழ் மக்களின் அபிலாசைகளை புரிந்து கொள்ளாத நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள். இரண்டாவது, தமிழ் மக்கள் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளிடையே கட்டுறுதியான கூட்டுச்செயற்பாட்டை தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
குறிப்பாக வடக்கில் தமிழ்த்தேசிய முலாத்துடன் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை, ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி என்பவை தாக்கம் செலுத்தும் கட்சிகளாக அமைந்திருந்தது. பரவலாக வடக்கில் பல சபைகளிலும் இக்கட்சிகள் மாறி மாறி பெரும்பான்மையையும் உறுதி செய்துள்ளது. மேலும் ஏனைய கட்சிகளின் அறுதிப் பெரும்பான்மையை இல்லாமல் செய்யும் சக்திகளாகவும் இருந்துள்ளது.
தமிழ் மக்கள் பொது எதிரியாக தேசிய மக்கள் சக்தியை இனங்கண்டு தோற்கடித்துள்ள அதேவேளை தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகள் சிதறடிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்குகளையும் சிதறடித்தே வழங்கியுள்ளார்கள். எந்தவொரு சபையிலும் எந்தவொரு கட்சியும் அறுதிப்பெரும்பான்மையை உறுதிப்படுத்த இயலாத நிலைமைகளே காணப்படுகின்றது.
தேர்தல் பிரச்சாரங்களில் தேசிய மக்கள் சக்தியை பொது எதிரியாக அடையாளப்படுத்திய தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகள் சபைகளில் அறுதிப் பெரும்பான்மையை உறுதி செய்ய தேசிய மக்கள் சக்தியிடமோ தென்னிலங்கை கட்சிகளிடமோ தஞ்சமடைவது தமிழ்த்தேசியத்துக்கும், தமிழ் மக்களினால் வழங்கப்பட்ட ஆணைக்கும் எதிரான செயற்பாடாகவே அமையக்கூடியதாகும்.
இந்நிலையில் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகள் தமக்கிடையே புரிந்துணர்வை உறுதி செய்வதனூடாக, தமிழ்த்தேசிய கொள்கையில் கூட்டுச் செயற்பாட்டினூடான சபைகளை பரிமாறிக்கொள்வது பொருத்தமானதாக அமையும். மூன்றாவது, தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளிடையே கூட்டுக்கான செயற்பாடு பெருமளவில் நிலையற்றதாகவே அமைகின்றது. தமிழ் மக்களின் பெரும்பான்மையான ஆதரவைப்பெற்ற, தம்மை தமிழ் மக்களின் பிரதான கட்சியாக பிரச்சாரப்படுத்தும் தமிழரசுக்கட்சி தமது பொறுப்பாண்மையை சரியாக கையாளத் தவறுகின்றது என்ற குற்றச்சாட்டு பொதுவெளியில் காணப்படுகின்றது.
தமிழரசுக் கட்சி
தேர்தல் முடிவுகளுக்கு பின்னரான ஊடக சந்திப்பில் தமக்கு மீளவும் தமிழ் மக்கள் வலிமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்கள் என்பதை பெருமிதப்படுத்திய தமிழரசுக்கட்சியின் இரண்டாம் துணைப் பொதுச்செயலாளர், 'இலங்கை தமிழரசுக் கட்சிக்கு அதிகளவான ஆசனங்கள் கிடைக்கப்பெற்ற சபைகளில், தமிழரசுக் கட்சியே ஆட்சியமைக்கும். ஏனைய கட்சிகள் அதனை அனுசரித்து எமக்கான ஆதரவை கொடுக்க வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள்' என்றவாறு மூர்க்கத்தனமான உரையாடலையே வழங்கியுள்ளார்.
தமிழ் மக்களின் ஆணை வெளிப்படுத்தியுள்ள கூட்டுச்செயற்பாட்டுக்கான எத்தனிப்புக்கள் காணப்படவில்லை. இது தமிழரசுக்கட்சி பெருமிதப்படும் தமிழ் மக்களின் பிரதான கட்சிக்குரிய இயல்பை நிராகரிப்பதாகவே அமைகின்றது. 1970களில் தமிழ்த்தேசியம் பாரிய சவாலை எதிர்கொண்டிருந்தது. இவ்வாறான நிலையிலேயே அன்றைய தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட தமிழரசுக்கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகளிடையே கூட்டுத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இனங்காணப்படுகின்றது.
இந்நிலையில் தமிழ்த்தேசிய அரசியலின் பிரதான மற்றும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆசனங்களை கொண்டிருந்த தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் வீடு சென்று கூட்டுச் செயற்பாட்டுக்கான கோரிக்கையை முன்வைத்தார். இதுவே பிரதான கட்சிக்குரிய 'பெரியண்ணாவிற்குரிய' பொறுப்பாண்மையாகும்.
இத்தகைய பொறுப்பாண்மைமிக்க தலைவர்கள் தமிழரசுக்கட்சியில் இன்மையையே அண்மைய நிலவரங்கள் உறுதி செய்கின்றது. கூட்டுச்செயற்பாடு தொடர்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 'ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சார்ந்த அதன் தலைவர் திரு.சித்தார்த்தன் மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அதன் பங்காளிக் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோருடன் மேற்படி விடயம் தொடர்பில் உரையாடியுள்ளோம்.
அவர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைத்தால் இணைந்து ஆட்சியமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம். அதேவேளை வவுனியா வடக்கு நெடுங்கேணியில் சிங்கள பௌத்த இனவாத தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றுவதனைத் தடுக்கும் வகையில் ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கவும் தீர்மானித்துள்ளோம்.' எனத் தனது சமுக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள கருத்து வரவேற்கத்தக்கதாகும்.
அதேவேளை தம்மை தமிழ் மக்களின் பிரதான கட்சியாக பிரச்சாரப்படுத்தும் தமிழரசுக்கட்சி, தமிழ் மக்களின் ஆணையை சரியாக கையாளும் விதத்திலும், தமக்குள்ள பொறுப்பாண்மையிலும் செயற்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்
நான்காவது, தமிழ் மக்களிடம் காணப்படும் கொள்கைவழி நிலைப்பும் தமிழ்த்தேசியம் சார்ந்த பற்றுறுதியும் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளிடையே அடையாளங் காணமுடிவதில்லை. கட்சிகள் தேர்தல் நலன்சார்ந்த இயக்கங்களாகவே காணப்படுகின்றது. இத்தகையை விரக்தியின் பின்னணியிலேயே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. இது தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளுக்கான எச்சரிக்கையாகவே அமைந்திருந்தது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளிலும் தேர்தல் நலன் சார்ந்து இயங்கும் தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளுக்கு தொடர்ச்சியான எச்சரிக்கையை வழங்குவதாகவே அமைகின்றது. அதனோர் பகுதியாகவே எந்தவொரு கட்சியும் அறுதிப்பெரும்பான்மையை உறுதி செய்ய முடியாத சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி தென்னிலங்கை கட்சியான தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள். எனினும் முழுமையாக நிராகரிக்கப்படவில்லை.
வடக்கு-கிழக்கில் ஆசனங்கள் கிடைப்பனவு வரிசையில் இரண்டாம் நிலையில் உள்ளார்கள். குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 81 ஆசனங்களை பெற்றுள்ளார்கள். தமிழர் தாயகத்தில் உள்ளூர் அரசியல் நிர்வாகத்தில் தேசிய மக்கள் சக்தி தமக்குரிய அடித்தளத்தை போட்டுள்ளார்கள். இது தமிழ்த்தேசிய அரசியலுக்கு எச்சரிக்கையான சூழலையே உணர்த்துகின்றது. தமிழ் மக்களின் ஆணையை தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகள் நிராகரிக்கும் சூழலில், தெரிவற்ற தமிழ் மக்கள் தென்னிலங்கையை நாடும் சூழலுக்குள் தள்ளப்படும் நிலைமைகளையே இது உணர்த்துகின்றது.
ஐந்தாவது, கட்சிகள் ஆழமாக புரிந்து கொள்ளப்பட வேண்டிய உண்மையாக அமைவது, 'தமிழ்த் தேசிய கருத்தியலாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் தமிழ் அரசியல் கட்சிகளின் கடந்த கால தவறுகளை மன்னித்து, தமிழ்த் தேசிய அரசியல் இயக்கங்களாக ஏற்றுக்கொண்டுள்ளமையின் பெறுபேற்றையே உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளில் பெற்றுள்ளார்கள்.
யாழ்ப்பாண ஊடக மைய நண்பர் பிரபாகன் டிலக்சன் தனது சமுகவலைத்தளத்தில் பதிவிட்டதாவது, 'கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பெரும்பாலான ஊடகங்கள், தமிழ்த் தேசிய கட்சிகளிடையே ஏற்பட்ட பிளவு, தமிழ்த் தேசிய கட்சிகளுக்குள் இருந்த உள்ளக முரண்பாடுகளையே செய்தியாக்குவதில் கவனம் செலுத்தியது.தமிழ்க் கட்சிகளின் பிளவுகளால் விரக்தியடைந்த மக்களும் தமிழ் அரசியல்வாதிகளின் முரண்பாடு தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளிவர, தமிழ்த் தேசிய கட்சிகள் மேல் வெறுப்படைந்து, தமிழ்க் கட்சிகளுக்கு பாடம் புகட்ட மாற்றம் ஒன்றைத் தேடத் தொடங்கினர்.
ஆனால் இந்த உள்ளூராட்சித் தேர்தலில் பெரும்பாலான ஊடகவியலாளர்கள் தமிழ்த் தேசிய உள்ளக முரண்பாடுகள் முன்னிலைப்படுத்தவில்லை. ஏனைய எல்லா தமிழ்க் கட்சிகளும் பொது எதிரியாக ஜே.வி.பியை காட்டியமையும், இளைய சமுதாயத்திற்கு ஜே.வி.பி.யின் இனவாத வரலாறுகளையும் என்.பி.பி மீதான விமர்சனங்களையும் முன்வைக்க, அந்தச் செய்திகளையும் மக்களும் அதிகம் நுகரத்தொடங்கினர்.
தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒற்றுமையை விரும்பிய மக்களும் தமிழ்த் தேசிய கட்சிகள் தங்களுக்குள் முரண்படுகின்ற செய்திகளை மக்களும் வெறுக்கத் தொடங்கினர். தமிழ்த் தேசிய உள்ளக முரண்பாடு பற்றிய பல செய்திகள் விரும்பியோ விரும்பாமலோ தணிக்கை செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது' இக்கருத்து நிதர்சனமானதாகும்.
இச்செயற்பாடு கருத்தியலாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் தமிழ்த்தேசியத்தின் மீது கொண்ட பற்றுறுதியால் அதன் இருப்பை பாதுகாக்க எடுத்த முன்முயற்சியாகும். இதனை தொடர்ச்சியாக பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல் கட்சிகளிடம் காணப்படுகின்றது.
எனவே, 2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளில் தமிழ் மக்கள் மீளவும் 'தாம் கொள்கையின் பக்கமும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டிலும் உறுதியாக உள்ளமையை' தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளுக்கு எச்சரிக்கையுடன் வழங்கியுள்ளார்கள். இவ்வாறான பின்னணியில் தமிழ்த் தேசிய மூலாம் பூசப்பட்ட கட்சிகள் தமிழ் மக்களின் ஆணைக்கு பொறுப்புணர்வுடன் செயற்பட கடமைப்பட்டுள்ளார்கள்.
மாறாக தமிழ் கட்சிகள் மக்கள் ஆணையை புறமொதுக்கி கூட்டுச்செயற்பாட்டை நிராகரிப்பதுடன், தமிழ் மக்களால் பொது எதிரியாக இனங்காணப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியுடன் கூட்டு சேர்ந்து மீள அரசியல் கட்சிகள் தமது தேர்தல் நலனுக்குள் இயங்க முற்படுவார்களாயின், எதிர்வரும் காலங்களில் மீள தமிழ் மக்கள் தமது அணுகுமுறையை மாற்ற வேண்டிய தேவையே உருவாகும். அதற்கான அடித்தளத்தை தமிழ்த்தேசிய கருத்தியலாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்களின் கூட்டில் முன்னகர்த்தப்பட வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |